இந்தியா

'என் வீட்டின் எதிரே ஏலியனின் வாகனம்' - பிரதமர் அலுவலகத்தை பதறவைத்த நபர்

'என் வீட்டின் எதிரே ஏலியனின் வாகனம்' - பிரதமர் அலுவலகத்தை பதறவைத்த நபர்

webteam

ஏலியனின் வாகனத்தை வீட்டிற்கு எதிரே பார்த்தேன் என்று புனேவில் இருந்து ஒருவர் பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவைச் சேர்ந்த 47வயதான ஒருவர் பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் ஏலியனின் வாகனத்தை வீட்டிற்கு வெளியே பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது மின்னஞ்சலை பார்த்து பதறிப்போன பிரதமர் அலுவலகம் தகவலை மகாராஷ்டிரா அரசுக்கு தெரிவித்தது. அம்மாநில அரசு குறிப்பிட்ட மின்னஞ்சல் யாரிடம் இருந்து வந்தது என்றும், அவர் குறிப்பிட்ட இடம் எது என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டது. பின்னர் மின்னஞ்சல் அனுப்பிய நபரை கண்டிபிடித்தது மகாராஷ்டிரா போலீஸ். 

விசாரணையில் மின்னஞ்சல் அனுப்பிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய நபர் மூளை ரத்த அழுத்தத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் நினைவுகளை மறந்து, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வீட்டின் முன்பு  உள்ள கட்டிடத்தில் ஒளிரும் விளக்குகளை பார்த்துள்ளார். அதை ஏலியனின் வாகனம் என்றும், இந்த பூமிக்கு ஏதோ சொல்ல வந்துள்ளாதகவும் அவர் நினைத்துக்கொண்டு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார் என்று தெரிவித்தார். 

இது குறித்து மின்னஞ்சல் அனுப்பியவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மின்னஞ்சல் அனுப்பியது குறித்து ஏதும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.