ஹரியானாவில் கடந்த 28ஆம் தேதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் 5 மாவட்டங்களில் இணையதள மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்னால், குருஷேத்ரா, கைத்தால், ஜிண்ட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள கர்னால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளை அரசு செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். போராட்டத்திற்க்கு முன்பாக ஒரு பெரிய கூட்டத்தை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட காயத்தால் ஒரு விவசாயி உயிரிழந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். எனினும் அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த தடியடி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.