டெல்லி திஹார் சிறையிலுள்ள இஸ்லாமிய சிறைக் கைதி ஒருவர் தனது முதுகில் சிறை அதிகாரிகள் ‘ஓம்’ முத்திரையை குத்திவிட்டதாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியின் சீலம்பூரி பகுதியை சேர்ந்தவர் நபீர். இவர் ஆயுதங்கள் விற்றக் குற்றத்திற்காக விசாரணை கைதியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது அங்குள்ள சிறை அதிகாரிகள் இவர் இஸ்லாமியர் என்று தெரிந்தும் இவரது முதுகில் ‘ஓம்’ முத்திரையை குத்தி விட்டதாக தெரியவந்துள்ளது.
நபீரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கார்கர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது நபீர் இதுதொடர்பாக நீதிபதியிடம் புகார் அளித்தார். அதில் அவர், “திஹார் சிறைச்சாலை அதிகாரிகள் என் முதுகில் ‘ஓம்’ முத்திரையை பதித்தனர். அத்துடன் அவர்கள் என்னை அடித்து சித்திரவதை செய்தனர். மேலும் எனக்கு உணவு அளிக்காமல் பட்டி இருக்கவும் வற்புறுத்தினர்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்தப் புகாரை ஏற்ற நீதிபதி ரிச்சா பாராசர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில் அவர், “குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் புகார் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அது விசாரிக்கப்படவேண்டிய ஒன்று. திஹார் சிறையின் டிஜிபி உடனே நபீரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
அத்துடன் டிஜிபி இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் பிற சிறை கைதிகளிடமும் இச்சம்பவம் குறித்து விசாரித்து விரிவான அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என ஆணை பிறப்பித்துள்ளார்.