இந்தியா

‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்

webteam

மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதலால் மேற்கு வங்கத்திலிருக்கும் தபால் நிலையம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. 

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே மிகுந்த கருத்து மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து இருவரும் மாறிமாறி தங்களை விமர்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜக உறுப்பினர்கள் மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்தக் கடிதம் தென் கொல்கத்தாவிலிருக்கும் காலிகட் தபால் நிலையத்திற்கு வந்து குவிந்து வருகிறது. 

இதுகுறித்து அந்தத தபால் நிலய அதிகாரிகள், “தோராயாமாக ஒரு நாளைக்கு 30 முதல் 40 மெயில் கடிதங்கள் முதலமைச்சர் பெயருக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது இந்தத் தபால் நிலயத்திற்கு வரும் 10% கடிதங்கள் முதலமைச்சர் பெயருக்கு வருகின்றன. இதுவரை 4500 ‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்கள் வந்துள்ளன. மேலும் பல கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தக் கடிதங்களுக்கு அஞ்சாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இவர்களுக்கு பதில் கடிதம் போட தொடங்கியுள்ளனர். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக், “வடக்கு பர்கானா, ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டத்திலுள்ள எங்களது கட்சியினர் ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்கலா’ என்ற கடிதத்தை அனுப்பிவருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.