இந்தியா

வாட்ஸ் அப் வதந்தி : தண்டோரா போட்டு சபாஷ் வாங்கும் பெண் எஸ்பி !

webteam

“தயவுசெய்து இந்த மெசேஜை அனைவருக்கும் பகிருங்கள் நம்மூரில் வந்து இறங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்”. வாட்ஸ்அப்பில் பரவி வரும் இதுபோன்ற வதந்திகளால் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்காக ஒரு பெண் போலீஸ் அதிகாரி போராடி வருகிறார். தலையில் நீல நிறத்தொப்பி மிடுக்கான காக்கி உடையுடன் காட்சியளிக்கிறார் ரேமா ராஜேஸ்வரி. தெலங்கானா மாநிலம் பாலமுரு பகுதிக்கு உட்பட்ட சரகத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு இந்தியாவின் பல பகுதியில் வாட்ஸ்அப் வதந்தி பரவி வந்தது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் குழந்தைளை கடத்தி செல்வதாக புகைப்படங்களுடன் வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியது. இதன் காரணமாக தமிழகம் ,அசாம், ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் அப்பாவிகள் சிலர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக வருபவர்கள் பலர் இந்த வதந்திகளால்,  பொதுமக்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். கிராமப்புறங்களில் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் நிறைய சிரமங்களுக்கு ஆளாகினர்.

அப்பாவி மக்களை காப்பதற்காக தனது கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு சென்று தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ராஜேஸ்வரி. வாட்ஸ்அப்பில்  பரவும் வதந்திகள் குறித்த விழிப்புணர்வும் பிறருக்கு அதனை அனுப்பமால் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய ராஜேஸ்வரி “ வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உண்மை தானா என்று ஆராயாமல் அதனை நீங்கள் மற்றவர்களுக்கு பகிர்வது தவறு. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பாதீர்கள். உங்கள் கிராமத்திற்கு தொடர்பில்லாத அந்நியர்கள் வந்தால் சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். வதந்திகளை நம்பி அவர்களை துன்புறுத்தாதீர்க்ள். என்று பேசினார்.

கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2009 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்தது. தற்போது ஹைதராபாத் பகுதியில் பணியாற்றி வருகிறார்.  ராஜேஸ்வரி தனக்கு கீழ் பணியாற்றி வரும் காவலர்களை வாரம் ஒருமுறை கிராமப்புற பகுதிகளுக்கு சென்று சமூகபிரச்னைகள் மற்றும் குழந்தை திருமணம் குறித்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காவலர் ஒருவர் தனக்கு தெரிந்த கிராமப்புற பகுதிக்கு சென்றபோது அங்கிருந்த மக்கள் வழக்கத்துக்கு மாறாக நடந்துக்கொண்டது தெரியவந்தது. பொதுவாக கோடை காலங்களில் கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் வெளியில் தான் உறங்குவார்கள் வீட்டினுள் காற்றோட்டம் அவ்வளவாக இருக்காது. ஆனால் இந்தக்கோடையில் பொதுமக்கள் குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் வெளியில் உறங்குவதை தவிர்த்துள்ளனர். 

இதுகுறித்து அவர் விசாரித்த போது குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்அப்பில் வரும் வதந்தியால் இவ்வாறு வெளியில் உறங்குவதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 500 காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து பேசியவர், காவலர்கள் மக்களிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் முன்பு அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றார். நூற்றுக்கும் மேற்பட்ட கிராம தலைவர்களை சந்தித்து இதுகுறித்து பேசினோம். அவர்கள் தண்டோராக்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அவர்களிடம் இந்தப் போலி வீடியோக்களை காட்டினோம். இது இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் இலங்கை, வங்கதேசம், மியான்மரில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்பதை புரியவைத்தோம். மேலும் இந்த கிராமங்களில் இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில் ஊர் தலைவர்கள் மூலம் காவலர்களை இணைத்தோம். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார் என்பது குறித்து கண்காணித்து வருகிறோம் என்றார். ராஜேஸ்வரியின் இந்த முயற்சியால் இவரது கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் வாட்ஸ் அப் வதந்தியால் இதுவரை எந்த மரணமும் நடக்கவில்லை. 

உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரி ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள்