பள்ளி அருகே வெடித்த மர்மபொருள் pt web
இந்தியா

டெல்லி: பள்ளி அருகே வெடித்த மர்மப்பொருள்.. சோதனைக்கு சேகரித்த பொருளும் வெடித்ததில் பதற்றம்..

டெல்லியில் சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்து சிதறிய நிலையில், சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

PT WEB

டெல்லியில் பிரசாந்த் விஹார் அருகே சிஆர்பிஎஃப் பள்ளி இயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், அந்தப் பள்ளி அருகே திடீரென மர்ம பொருள் வெடித்துச் சிதறியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமான நிலையில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் பள்ளியின் சுவரும், அருகில் இருந்த சில கடைகளும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரும் சேதமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்களும், காவல் துறையின் தடயவியல் நிபுணர்களும் அப்பகுதிக்கு சீல் வைத்து ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மர்ம பொருள் வெடித்துச் சிதறியது தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மர்ம பொருள் வெடித்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினர். அதிநவீனக் கருவிகளைக் கொண்டு மர்ம பொருள் வெடித்துச் சிதறிய இடத்தை அலசி ஆராய்ந்தனர். தீவிரவாத சதித்திட்டம் காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட மற்றொரு மர்ம பொருள் வெடித்தால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.