சிம்லா முகநூல்
இந்தியா

சிம்லா| மருத்துவ மாணவிகள் விடுதியிலுள் நுழைந்த இளைஞர்! 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

சிம்லாவில் உள்ள பெண் டாக்டர்கள் தங்கும் விடுதியிலுள் நுழைந்த 23 வயது ஆண் ஒருவர், 4 ஆவது மாடியிலிருந்து தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சிம்லாவில் உள்ள பெண் டாக்டர்கள் தங்கும் விடுதியிலுள் நுழைந்த 23 வயது ஆண் ஒருவர், 4 ஆவது மாடியிலிருந்து தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் டாக்டர்கள் தங்கும் விடுதியானது அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 12.30 மணி அளவில், 23 வயதுடைய ஆண் ஒருவர் நுழைந்துள்ளார். அப்போது, படிக்கட்டு ஒன்றிலிருந்து , நான்காவது மாடியின் ஒரு பகுதியை நோக்கி குதிக்க முயற்சித்துள்ளார். அப்போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகிலிருந்தவர்கள், இளைஞரை இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து, மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ”இவர், விடுதியில் வசிக்கும் இவரது நண்பர்களில் ஒருவரைச் சந்திக்க வந்துள்ளார். அப்போது, படிக்கட்டுகளில் இருந்து நான்காவது மாடியில் உள்ள ஒரு இடத்திற்கு குதிக்க முயன்றபோது அவர் தடுமாறிய நிலையில், கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், இதுவரை, இது தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பாலம்பூரில் வசிக்கும் கரண் பாட்டியல் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கங்க்ராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் மாணவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.