குஜராத் முகநூல்
இந்தியா

திருமணத்தை மீறிய உறவு: தந்தையோடு மகளின் உயிரும் பறிபோன சோகம்!

பார்சலை திறந்து பார்த்தபோது அதில், எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று இருந்துள்ளது.பின்னர், அதற்கு மின்சார இணைப்பு கொடுக்கவே, அந்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம் வேதா கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா வன்சாரா, வயது 33. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவ தினத்தன்று , ஜிதேந்திராவின் வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வழங்கப்பட்ட பார்சலை ஜிதேந்திரா திறக்கவே, அவரின் அருகில் அவரின் இரண்டு குழந்தைகளும், உறவுக்கார குழந்தை ஒருவரும் இருந்துள்ளனர்.

பார்சலை திறந்து பார்த்தபோது அதில், எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று இருந்துள்ளது.பின்னர், அதற்கு மின்சார இணைப்பு கொடுக்கவே, அந்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது. இதனால், அங்கு இருந்த ஜிதேந்திரா வன்சாரா மற்றும் மூன்று குழந்தைகளான பூமிகா, சாயா ,ஷில்பா ஆகியோரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதில், ஜிதேந்திரா வன்சாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த குழந்தைகள், வடலி அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், ஜிதேந்திரா வன்சாராவின் 14 வயது மகள் பூமிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள குழந்தைகளில் ஒருவர் மருத்துவமனையில் வெண்டிலேட்டரின் உதவியுடன் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஜிதேந்திரா வீட்டிற்கு வந்த பார்சலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆட்டோ ரிக்‌ஷாவின் மூலம் வந்து கொடுத்துள்ளார் என்று அருகிலிருந்து பார்த்த உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள ஜெயந்தி வன்சாரா என்றவர்தான், இந்த பார்சலை ஜிதேந்திரா வன்சாராவின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அனுப்பியதற்கான காரணம், ஜிதேந்திரா, ஜெயந்தி வன்சாரவின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இது குறித்து, ஜெயந்தி வன்சாராவும் தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில், ஜெயந்தி வன்சாரா சுரங்க வேலை பார்ப்பவர் என்பதால், தான்வாங்கி வந்த பரிசு பொருளில் அம்மோனியம் நைட்ரேட்டை நிரப்பி அந்த பார்சலை ஜிதேந்திரனின் வீட்டிற்கு அனுப்பி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.