இந்தியா

“பாலினத்தை சொல்ல மாட்டோம்” - பிறந்தது குழந்தை! மகிழ்ச்சியில் டிரான்ஸ் இணையர்! ஆனால்?

“பாலினத்தை சொல்ல மாட்டோம்” - பிறந்தது குழந்தை! மகிழ்ச்சியில் டிரான்ஸ் இணையர்! ஆனால்?

webteam

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ட்ரான்ஸ் இணையருக்கு, இன்று குழந்தை பிறந்துள்ளது.

சமூகத்தில் மாற்று பாலினத்தவர் குறித்த புரிதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமா உள்ளிட்ட கலை அம்சங்களில் கூட மாற்று பாலினத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கும் வகையில் படைப்புகள் வெளியாகி வருகிறது. இதற்கு ஒரு கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானவர்களாக பார்க்கப்பட்டவர்களை அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்குமாறு தற்போதைய படைப்புகள் வலியுறுத்துகின்றன. மாற்று பாலினத்தவர்களும் இதற்கு முன்பிருந்த தயக்கங்களை உடைத்தெறிந்து தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தி கொள்கின்றனர். தங்களுக்கு விரும்பிய அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். அப்படி தங்களுக்கென்று ஒரு அன்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்தான் கேரளாவைச் சேர்ந்த சாஹத் - சியா பாவல் என்ற மாற்றுப் பாலின இணையர். 

எத்தனையோ விமர்சனங்களை தாண்டி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இந்த மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த இணையர் பெற்றோராய் மாறியிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாகி இருக்கிறது. இந்த பேசுபொருளுக்குக் காரணம், இந்தியாவின் முதல் ட்ரான்ஸ் இணையரின் குழந்தை இவர்களுடையது என்பதுதான். நிறைமாத கர்ப்பத்துடன் சாஹத் இருக்கும் புகைப்படம் கடந்த வாரம் முழுவதுமே பேசு பொருளாக இருந்த நிலையில் அவருக்கு தற்போது நல்ல முறையில் பிரசவம் ஆகியுள்ளது. தற்போது இந்த இணையர் எத்தகைய மனநிலையில் உள்ளனர், இந்த இணையர் குறித்து என்னவிதமாக பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதோடு இவர்களின் முழுப் பின்னணியையும் தற்போது விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் மாற்றுப் பாலின பெற்றோர்

கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயதான சாஹத் மற்றும் 21 வயதான சியா பாவல் என்ற மாற்றுப் பாலின தம்பதியர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலின மாற்று அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ள துவங்கினர். இந்த சிகிச்சை ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, சியாவின் கருவையும் தன் கருப்பையில் சுமக்கத் தொடங்கினார் சாஹத். அதன் பலன், தற்போது அவர்களுக்கு இன்று ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அந்த இணையரிடம் தற்போது சமூக வலைதளத்தில் பலரும் கேட்கும் கேள்விதான் அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை ஆணா, பெண்ணா?

ஆம், அவர்கள் எழுப்பும் கேள்வி, ‘உங்கள் குழந்தை ஆணா, பெண்ணா’ என்பதுதான். பொதுவாக எல்லோரும் எழுப்பும் கேள்விதான் இது என்றாலும், இந்த இணையரிடம் கேட்கப்படுவதுதான் ஆச்சரியமளிக்கிறது. ஆனால், இந்தக் கேள்விக்கு அந்த இணையர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் அளிக்கும் ஒரே பதில், ”ஒரு குழந்தை பிறந்திருக்கிறது” என்பதுதான் குறிப்பிடத்தகுந்த விஷயம். இந்தக் குழந்தைக்கு கேரள கோழிக்கூடு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கறிஞர் திவ்யபாரதி முகநூல் பதிவு

இதுகுறித்து அந்த இணையரின் சமூக வலைத்தளப் பக்கத்தைத் தொடர்ந்து follow செய்துவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி, தன் முகநூல் பக்கத்தில், “இன்று காலை zahad- ziya தம்பதியினனருக்கு நல்லபடியாக ’குழந்தை’ பிறந்துள்ளது. வெறும் குழந்தை என்றுதான் அந்த தம்பதியும் கேரளாவின் Queer activistகளும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் எழுதி வருகிறார்கள். ’ஆண் குழந்தையா... பெண் குழந்தையா’ என கேட்டுவரும் Commentsகளுக்கு அவர்கள் பதில் அளிப்பதே இல்லை.

அப்படியே பதில் அளித்தாலும் "குழந்தை பிறந்துள்ளது" என்பது தான் அவர்களின் உறுதியான பதில். இதுதான் இங்கே மிக முக்கியமானது. பிறக்கும் எல்லா குழந்தைக்கும் அதன் உறுப்பை மட்டும் வைத்துக்கொண்டு, அதை ’ஆண்’ என்றும் ’பெண்’ என்றும் நாமே Label குத்த துவங்குவதில்தான் எல்லா சிக்கலும் இங்கே துவங்குகிறது. குழந்தை பிறந்திருக்கிறது அவ்வளவுதான்” என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அந்த குழந்தை வளர்ந்து தன்னை என்னவாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறதோ, அதுதான் அந்த உயிரின் Gender அடையாளம். அப்போது அதுகுறித்து தொடர்புடையவர்கள் பேசிக் கொள்வார்கள். நாம் அமைதியாக இருந்தால் அதுவே போதும். இப்போது Zahad - Ziya விற்கு அற்புதமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதைக் கொண்டாடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

குழந்தை பெற்றது எப்படி?

இந்தச் சமூகத்தில் Transman (பாலினம் மாறிய பின் ஆணாக இருப்பது) - Transwoman (பாலினம் மாறிய பின் பெண்ணாக இருப்பது) தம்பதியாக வாழ்வதே பெரும் சவால். அப்படியிருக்கையில் அவர்களுக்கு இந்த குழந்தை பிறப்பு எப்படிச் சாத்தியமானது? இதில் சியா பாவல் என்பவர், பிறப்பால் ஆண். ஹார்மோன் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு இவர் தற்போது பெண்ணாக மாறிவருகிறார். இக்கட்டுரையில் இருக்கும் புகைப்படத்தில் சுடிதார்/ புடவை போன்ற உடைகளை உடுத்தியிருக்கும் நபரே சியா பாவல்.

ஹார்மோன் அறுவைச்சிகிச்சை

அதேநேரத்தில் சாஹத் என்பவர் பிறப்பால் பெண். குழந்தை பெற்றிருக்கும் இவர்தான், தற்போது ஹார்மோன் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு ஆணாக மாற இருக்கிறார். இக்கட்டுரையின் புகைப்படத்தில் கருவுற்றிருக்கும் நபரே சாஹத். பிறப்பால் பெண்ணாகவும், ஆணாகவும் அறியப்பட்ட இவர்கள், இயற்கையாகவே கருவுற வாய்ப்புள்ளது. பெரியளவிலான சிகிச்சைகள் தேவைப்படாது. அப்படியே இவர்கள் கருவுற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. கருவுறும் முன்னரே இருவரும் அடிப்படை பாலின மாற்று சிகிச்சைகளை தொடங்கியிருக்கின்றனர். இதனால் கருவுறுதலில் சிறு சிறு சிக்கல்கள் வந்திருக்கலாமென்றும், அதனாலேயே கருவுற மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. ஆக, இப்போது குழந்தை பெற்றது பிறப்பால் பெண்ணான சாஹத்தான். இவர் தற்போது சிகிச்சை மூலம் பாதி ஆணாகியிருக்கிறார்.

சாதனை படைத்த முதல் மாற்றுப் பாலின தம்பதி

உதாரணத்துக்கு, மார்பாகங்களை நீக்கியுள்ளார்; சில ஹார்மோன் சிகிச்சைகளும் செய்துள்ளார். குழந்தை பிறப்பதற்காக பாலின மாற்று சிகிச்சையை தொடராமல் இருந்த அவர், இனி அதை தொடர்வார். அப்படி இவர் ஆணாக மாறும்பட்சத்தில், இவர் அந்தக் குழந்தையால் ’அப்பா’ என்றே அழைக்கப்படுவார். அதனால்தான், இவரை ’தாயுமானவன்’ என்று அழைக்கின்றனர் இணையவாசிகள். இணையரில் இன்னொருவரான சியா பாவல், பிறப்பால் ஆணாக அறியப்பட்டு, இப்போது பெண்ணாக மாறும் சிகிச்சையில் உள்ளவர். இவரும் குழந்தைக்காக தனது சில சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். ஆக, தனது அடுத்தடுத்த சிகிச்சைக்குப்பின் இவர் குழந்தையின் ’அம்மா’வாக அறியப்படுவார். இப்படியாக தங்களின் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இடையே பெற்றோர் ஆகி இருக்கும் இந்த இணையரே, இந்தியாவின் முதல் மாற்றுப் பாலின பெற்றோராய்ச் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்குத்தான் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

- ஜெ.பிரகாஷ்