இந்தியா

ஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்

ஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்

webteam

ஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் வருவதால் தேர்வாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அனைத்து தேசிய வங்கிகளுக்கான எழுத்தர் மற்றும் பிரபோஷ்னரி அதிகாரிகளுக்கான பணியிடங்களுக்கு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தேர்வுகளை நடத்தி வருகிறது. 2011ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி இந்த வருடத்துக்கான தேர்வு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதில் இருந்தும் இந்தத் தேர்வை 7200 பேர் எழுத உள்ளனர். 

அதேபோல் தேசிய வங்கிகள் இல்லாத மற்ற வங்கிகளுக்கான எழுத்தர் மற்றும் பிரபோஷ்னரி அதிகாரிகளுக்கான இடங்களுக்கு அந்தந்த வங்கிகளே தேர்வுகளை நடத்துகின்றன. அப்படி ல‌ஷ்மி விலாஸ் வங்கியும் இந்த வருடத்துக்கான தேர்வு வரும் 20 தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. இரண்டு வங்கி தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் அந்தத் தேர்வுகளுக்கு தயாரான தேர்வாளர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து பேசிய தேர்வாளர் ஒருவர், நான் இரண்டு தேர்வுகளுக்கும் தயாரானேன். ஆனால் தற்போது இரண்டு தேர்வுகளும் ஒரே நேரத்தில் வருகிறது. ல‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ.700 பணம் செலுத்தி பதிவு செய்துள்ளேன். பணம் பிரச்னை இல்லை, ஆனால் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போகிறது. என்னைப்போல் பலரும் இரண்டு தேர்வுகளுக்கும் தயாராகி இருப்பார்கள். என்று வருத்தம் தெரிவித்தார்.

தேர்வு தேதியை மாற்றி வைக்கக்கோரிய கோரிக்கைகளை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நிராகரித்துள்ளது. தேர்வு தேதியை மாற்ற முடியுமா என்ற கோரிக்கைக்கு ல‌ஷ்மி விலாஸ் வங்கி பதிலளிக்க மறுத்துவிட்டது.