ed, nia, cbi twitter
இந்தியா

டெல்லி to தமிழகம்.. தொடரும் சோதனைகள்: யார்,யார் வீடுகளில்.. எதற்காக? கடந்த கால சோதனைகள் ஒரு லிஸ்ட்!

நாடு முழுவதும் கடந்த காலங்களில் ED, NIA, CBI ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட சோதனைகளின் பட்டியல் குறித்து இங்கே பார்க்கலாம்.

Prakash J

அமலாக்கத் துறையினர் சோதனை ஏன்?

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக, தனிநபர்கள் யாரை வேண்டுமானாலும் சோதனை செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில், பணமோசடி அல்லது பிற பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியவற்றின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வழக்குப் பதியப்படும்.

10க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை!

தவிர, அந்தச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், அதில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் அமலாக்கத் துறைக்கு உண்டு. இதன் அடிப்படையிலேயே சமீபகாலமாக நாடு முழுவதும் அமலாக்கத் துறை சோதனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பார்க்கப்போனால், கடந்த சில மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மீது ED/CBI சோதனைகள் நடைபெற்றுள்ளது.

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலின் துணைச் செயலாளராக இருந்த சௌமியா சௌராசியா வீட்டில், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பத்ரா சாவுல் நில ஊழல் வழக்கு தொடர்பாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில், 2022 ஜூலை 31ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அடுத்து, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகத்தில் 2022, ஆகஸ்ட் 2ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மணீஷ் சிசோடியா,

டெல்லி ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியா மற்றும் காங்கிரஸார் வீடுகளில் சோதனை!

அடுத்து, மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா வீட்டில் 2022 ஆகஸ்ட் 19ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பேரில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது சிசோடியா சிறையில் உள்ளார். இதைத் தொடர்ந்து, சட்டீஸ்கர் மாநில நிலக்கரி வரிவிதிப்பு முறைகேட்டு தொடர்பாக காங்கிரஸைச் சேர்ந்த கிரிஷ் தேவாங்கன், தேவேந்திர யாதவ், ராம்கோபால் அகர்வால், ஆர்.பி. சிங், வினோத் திவாரி, சுஷில் சன்னி அகர்வால் ஆகியோரின் வீடுகளில் கடந்த (2023) பிப்ரவரி 20ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

பீகார் தேஜஸ்வி யாதவ், திமுக செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை!

இந்தச் சோதனைக்குப் பிறகு, ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் கடந்த (2023) மார்ச் 10ஆம் தேதி சோதனை நடைபெற்றது. இதற்குப் பிறகு, போக்குவரத்துத் துறையில் பேருந்து நடத்துநர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில், கடந்த (2023) ஜூன் 13ஆம் தேதி சோதனை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி

திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில்  நடைபெற்ற சோதனை!

இவரைத் தொடர்ந்து, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி வீட்டில், கடந்த (2023) ஜூலை 17ஆம் தேதி சோதனை நடைபெற்றது. செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதன் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சோதனை நடைபெற்றது.

அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் 40 இடங்களில் நடைபெற்ற சோதனைகள்!

மேலும், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி, சென்னை, தஞ்சை உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதற்கு முன்னதாக, சென்னை உட்பட புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி எம்.பியான சஞ்சய் சிங் வீட்டில் சோதனை

அதுபோல் ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பாக கேரளாவில், எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம் உள்பட 14 இடங்களில் கடந்த ஜூன் 20ஆம் தேதி சோதனை நடத்தினர். அடுத்து, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி (நேற்று) ஆம் ஆத்மி எம்.பியான சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடைபெற்றது.

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை!

இன்று தமிழக எம்.பியான ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு எழுந்த புகாரின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான ஹோட்டல், ஆழ்வார் ஆய்வு மையம், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 60 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி, டெல்லியில் நியூஸ் கிளிக் நிறுவனத்தைச் சேர்ந்த 46 பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி பத்திரிகையாளர் வீடுகளில் சோதனை

பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை!

இதற்கு முன்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், பல இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனப்படும், பி.எப்.ஐ., அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்றும் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அதிமுகவை தொடர்ந்து பாஜகவுக்கு மேலும் அடி; பவன் கல்யாண் கட்சியும் விலகல்! 2019-க்கு பின் நடந்ததுஎன்ன?