திருப்பதி லட்டு புதிய தலைமுறை
இந்தியா

‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!

Prakash J

திருப்பதி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, ஸ்ரீஏழுமலையான் கோயிலில் தயாரித்து விற்கப்படும் லட்டுகள்தான். உலகம் முழுவதும் பிரபலமடைந்த இந்த லட்டு, தற்போது ஆந்திர அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. தவிர, பக்தர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருப்பதுடன், நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதுபோல், ஆளும் தெலுங்கு தேச கூட்டணியிலான சந்திரபாபு நாயுடு அரசும் இவ்விவகாரத்தில் தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள் குறித்து சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் இங்கு பார்ப்போம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விநியோகிக்கப்படும் புனித பிரசாதமாக கருதப்படும் லட்டுகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருப்பதி கோயில் லட்டுகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்தே, கள்ளச்சந்தையில் அதிக லட்டுகள் விற்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சமீபத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

முன்பெல்லாம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும். அதன் பிறகு சாமி தரிசனம் செய்யவில்லை என்றாலும் லட்டு பிரசாதமாக வாங்கிக் கொள்ளலாம். இதை பயன்படுத்தி அதிக லட்டுக்களை பெற்றுச் சென்று, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், சாமி தரிசனம் செய்யாதவர்கள் லட்டு வாங்க வேண்டுமானால், அவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: புனே|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. வைரலான தாயின் உருக்கமான கடிதம்! நிறுவன தலைவர் கொடுத்த பதில்

பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் இந்த லட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்திருக்கும் ’பொடு’ எனும் மடப்பள்ளியில் மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டு தயாரிப்பு, கடந்த 1715ஆம் ஆண்டு முதல் தொடங்கியிருக்கிறது. அதன்படி பார்க்கப்போனால், இதன் காலம் 300 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. இந்த லட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு ’ஜிஐ’ எனப்படும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

எனவே, இந்த தயாரிப்பு முறையைப் பயன்படுத்தி வேறு யாரும் லட்டு தயாரித்து, இந்தப் பெயரில் விற்பனை செய்ய முடியாது. பொதுவாக, இந்த லட்டுகளைத் தயாரிக்கும் சமையல்காரர்கள் தங்கள் தலையை மொட்டையடித்தும் சுத்தமான ஆடையை அணிந்தும் பாரம்பரிய முறையில் ஈடுபடுகின்றனர்.

திருப்பதி லட்டு

அவர்கள் தயாரிக்கும் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு சுவாமிக்குப் படைக்கப்படுகிறது. பக்தர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கொண்டைக்கடலை மாவு, சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், திராட்சை, அரிசி மாவு, நெய் உள்ளிட்ட பொருள்களை ஒரேசீரான அளவில் கலந்து திருப்பதி லட்டு பல ஆண்டுகாலமாக ஒரே சுவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுவின் சிறப்பம்சமே அதில் சேர்க்கப்படும் தரமான பொருள்களும் நெய்யும்தான்.

இதையும் படிக்க: ஒடிசா|பிரபல பாடகி 27 வயதில் திடீர் மரணம்.. எதிராளிகள் விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

இந்த லட்டுகளைத் தயாரிக்க தினமும், 400-500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ திராட்சை, 200 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு சுமார் 5,00,000 கிலோ நெய் தேவைப்படுகிறது. இவற்றுக்கான கொள்முதல் செயல்முறையானது ஆன்லைன் ஏலத்தை உள்ளடக்கியது. இது, 6 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதிலும் நீண்ட பரிசோதனைக்குப் பின்பே ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

கர்நாடக அமைப்பிடமிருந்து திருப்பதி அறக்கட்டளை தற்போது 1 கிலோ நெய் ரூ.475 என்ற விலையில் வாங்குகிறது. கோயிலில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு லட்டுவின் தரத்தையும் உறுதி செய்வதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஓர் அதிநவீன உணவுப் பரிசோதனை ஆய்வகத்தை பராமரித்து வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு லட்டுவும் 175 கிராம் எடையுடனும், அதன் GI நிலையை தக்கவைக்க முந்திரி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் துல்லியமான அளவுடனும் இருக்க வேண்டும்.

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) குழு சப்ளையர்களை ஆய்வுசெய்து சுகாதாரம் மற்றும் தரமான தரத்தை உறுதிப்படுத்துகிறது. அனைத்துப் பொருட்களும் சமையலறையில் பயன்படுத்தப்படுவதற்கு முன் கடுமையான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும், கூடுதலாக, லட்டு மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனுக்கு மேலதிக பரிசோதனைக்காக அடிக்கடி அனுப்பப்படுகின்றன. இந்த லட்டுகளைத் தயாரிக்க, சுமார் 600 நிபுணத்துவ சமையல்காரர்கள் தினம் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். தினமும் 3,50,000 லட்டுகள் வரை தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சிறப்பு நாட்களில் 4,00,000 லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. திருப்பதி லட்டு விற்பனையின் மூலம், ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கிறது.

இதையும் படிக்க; சீனா| கர்ப்பிணிப் பெண்ணைப் பயமுறுத்திய நாய்.. கலைந்த கரு.. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு, வீட்டு திரும்புவதற்கு பல நாட்கள் ஆனது. அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, எளிதில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக லட்டுக்களை பிரசாதமாக தயாரித்து கொடுக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரிய அளவிலேயே லட்டு பிரசாதம் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த பெரிய அளவிலான லட்டும், தற்போது குறைந்த அளவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ’கல்யாண லட்டு’ என்று பெயர். திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இந்த லட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்படும் லட்டு 750 கிராம் கொண்டதாக இருக்கும். லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக விறகு அடுப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. திருப்பதி லட்டின் வடிவம் தற்போது வரை 6 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா | தடுப்பூசி போட்ட இளம்பெண்.. 10 நிமிடத்தில் பார்வை இழப்பு, வாய் அசைவின்மை.. நடந்தது என்ன?