13 அடி நீள மலைப்பாம்பு X வலைதளம்
இந்தியா

முட்புதரில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு; பத்திரமாக மீட்டு வனத்தில் விட்ட வனவிலங்கு ஊழியர்கள்!

கோடையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த 13 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

Jayashree A

கோடைகாலம் என்பதால் வனவிலங்குகள் பூச்சிகள் போன்றவை அதன் இருப்பிடங்களில் இரை கிடைக்காமலும் தண்ணீர் இன்றியும் தவிப்பதால், அடிக்கடி மனிதர்கள் இருக்கும் இடம் தேடி வருகிறது.

அப்படி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், இஸ்மாயில்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள வயல்பகுதி ஒன்றில் விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்துக்கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த முட்புதற் ஒன்றில் 13 அடி நீள ராட்சத மலைப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பு விவசாயிகளுக்கு தோழன்தான் என்றாலும் ராட்சத மலைப்பாம்பு தோழன் அல்ல.... அது உணவிற்காக மாடுகளையும் ஆடுகளையும் விழுங்கக்கூடியது. ஆகவே மெகா சைஸ் மலைப்பாம்பை கண்ட சில விவசாயிகள் பயத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிலர், முட்புதரில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக வனவிலங்கு ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வன ஊழியர்கள், சுமார் 13 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத மலைப்பாம்பை பிடிக்க கடுமையாக போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. பலத்த முயற்சிக்கு பிறகு, மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வீடியோ X வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.