tirupati laddu issue pt web
இந்தியா

பூதாகரமான திருப்பதி லட்டு விவகாரம்|சந்திரபாபு Vs ஜெகன்.. ஆந்திர அரசியலில் நடப்பது என்ன? முழு விவரம்!

Prakash J

திருப்பதி லட்டு| நெய்யில் கலப்படம் விவகாரம்!

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார்.

இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் உறுப்பினர் ரமணா, "ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே கால்நடை தீவனம் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களைச் சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் (NDDB CALF) அறிக்கையின்படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க; சீனா| கர்ப்பிணிப் பெண்ணைப் பயமுறுத்திய நாய்.. கலைந்த கரு.. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

”நடவடிக்கை எடுக்கப்படும்” - சந்திரபாபு நாயுடு

இதையடுத்து இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் ”திருப்பதி கோயிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதாகும்.

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்துள்ளனர். அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரியவந்துள்ளது. திருப்பதி கோயிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடு

மறுபுறம், திருப்பதி லட்டு விவகாரம் உலகில் பேசுபொருளாகிவரும் நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க: அமெரிக்கா | தடுப்பூசி போட்ட இளம்பெண்.. 10 நிமிடத்தில் பார்வை இழப்பு, வாய் அசைவின்மை.. நடந்தது என்ன?

லட்டு விவகாரம்|தலைவர்கள் சொல்வது என்ன?

ஆந்திர பிரதேசம் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, "தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இந்து மக்களின் நம்பிக்கையைக் காயப்படுத்தி அரசியல் செய்து வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து இதை விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். முதல்வராக இருக்கும் சந்திரபாபு, லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது எனக் கூறியிருப்பது வருத்தமடைய வைக்கிறது, மேலும் திருப்பதியின் மாண்பு மற்றும் புனிதத்திற்கு கலங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைக்க வேண்டும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் ”லட்டுவில் விலங்குகளின் கொழுப்பை சேர்ப்பது திருமலை வெங்கடேஸ்வர சுவாமியிடம் பிரார்த்தனை செய்யும் இந்துக்களின் நம்பிக்கைக்கு இழைக்கும் துரோகம் ஆகும். இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்க அரசை வலியுறுத்துகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வழங்கிய நெய்யில்தான் கலப்படமா?

இதற்கிடையே, திருப்பதி லட்டுவிற்கு கடந்த ஆண்டுவரை, கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்துதான், நெய் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதனுடைய விலை அதிகமாக இருப்பதாகக் கூறி புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறைந்த விலையில், அதாவது கிலோவுக்கு 320 ரூபாய் என நிர்ணயம் செய்திருந்த தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து நெய் வினியோகிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு

இந்த நெய்யில்தான் தற்போது விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. என்றாலும், இதுகுறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இதற்கு அப்போதே அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இந்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அந்த ஒப்பந்த நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது லட்டு தயாரிக்க கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடமிருந்து ஒரு கிலோ நெய் ரூ.475 விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

மறுபுறம், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) குற்றச்சாட்டு வைத்திருப்பது தொடர்பாக, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சட்டம் ஒழுங்கை திசைதிருப்பவே லட்டு விவகாரம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் முதல்வரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன், “ஆந்திர சட்டம் ஒழுங்கு பிரச்னையை திசை திருப்பவே லட்டு விவகாரத்தை கிளப்பியுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்டவற்றை திசை திருப்ப சந்திரபாபு நாயுடு முயல்கிறார்.

கடவுளின் பெயரால் தற்போது அரசியல் செய்கின்றனர். எங்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கு தரப்பட்டு வந்த உதவித் தொகை கூட தற்போது வழங்கப்படுவதில்லை.

முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எங்கள் ஆட்சியில் வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன; தற்போது அதை நிறுத்திவிட்டனர். சந்திரபாபு 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே நெய் கலப்பட புகார் கொடுத்துள்ளனர்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். லட்டு தயாரிப்பதற்கு தரப்படும் நெய்யை ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை ஆன்லைன் மூலம் டெண்டர். ஆன்லைன் மூலம் டெண்டர் கோரப்பட்டு அதில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவஸ்தானம் அங்கீகரிக்கும்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மீது விளையாடுவது தர்மம் இல்லை. நெய்யின் தரத்தை பரிசோதிக்கும் முறையை பல ஆண்டுகளாக தேவஸ்தானம் மாற்றவில்லை. 3 பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நெய்யை லட்டு தயாரிப்பிற்கு பயன்படுத்துவர். 3 பரிசோதனைகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தாலும் நெய்யை பயன்படுத்த அனுமதி கிடையாது. NABL மற்றும் தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதி தேவஸ்தானம் நெய்யை அனுமதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.