மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்ஷா, முல் மற்றும் பாம்பர்னா வட்டங்களைச் சேர்ந்த பத்து கிராமங்களுக்கு சைக்கிள் துணையோடு நடந்தே சென்று 60 ஆண்டுகளாக மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்துவருகிறார் 87 வயதான ராம்சந்திர தண்டேகர்.
தற்போது சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள முல் கிராமத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார் இந்த எளிய மருத்துவர். ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவரான அவர் தொற்றுநோய்க் காலத்திலும் சோர்வடையாமல் மருத்துவம் பார்த்துவருகிறார்.
குக்கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிப்பதில் தள்ளாத வயதிலும் பேரார்வம் கொண்டுள்ளார் ராம்சந்திர தண்டேகர். ஒவ்வொரு வீடாகச் சென்று நோயாளிகளைச் சந்திக்கிறார். தினமும் பத்து கிலோ மீட்டருக்குக் குறையாமல் பயணம் செய்துவருகிறார். ஒரு நாள் இரு நாளல்ல. அவரது மருத்துவ சேவை 60 ஆண்டுகளாக தொடர்கிறது.
"என்னுடைய அன்றாடப் பணிகள் முன்புபோலவே உள்ளன. கிராம மக்களுக்கு தன்னலமற்ற சேவையை தொடரவே விரும்புகிறேன்" என்று கூறும் தண்டேகர், 1957 - 58 ஆம் ஆண்டில் நாக்பூர் ஹோமியோபதி கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்ற பிறகு சந்திரபூர் ஹோமியோபதி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அடுத்த சில ஆண்டுகளிலேயே கிராமப்பகுதிக்கு நகர்ந்து மருத்துவ சிகிச்சை கிடைக்காத மக்களுக்காக இலவச சேவை செய்யத் தொடங்கியுள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை கால அட்டவணைப்படி கிராமங்களுக்குச் சென்றுவருகிறார். தன்னுடன் கூடவே சில மருந்துகளை எடுத்துச்செல்கிறார். ஆனால் அவரிடம் கைக்கடிகாரமோ மொபைல் போனோ கிடையாது.
கிராமங்களுக்கு அவர் ஒருநாள் செல்லவில்லை என்றாலும் மக்களிடம் இருந்து, "டாக்டர்.. எங்க ஊருக்கு வாங்க" என தொலைபேசி அழைப்பு வந்துவிடும் என்கிறார் அவரது மூத்த மகன் ஜெயந்த் தண்டேகர். சில நேரங்களில் வீடு திரும்ப நேரமாகிவிட்டால், கிராமத்தினர் வீடுகளிலேயே தங்கிவிடுவாராம் 87 வயதான ஹோமியோபதி மருத்துவர் ராம்சந்திர தண்டேகர்.