மஹாராஷ்டிராவில் கடந்த முறை நடந்த தேர்தலை விட இம்முறை நடந்த தேர்தல் மிகவும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த முறை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரே கட்சியாக காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் இம்முறை அது இரண்டாக உடைந்து ஒரு பிரிவு காங்கிரசுடனும் இன்னொரு பிரிவு பாஜகவுடனும் கூட்டு வைத்து போட்டியிட்டது. இதே போல சிவசேனா கடந்த முறை பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டது, ஆனால் இம்முறை அது 2ஆக உடைந்து ஒரு பிரிவு காங்கிரசுடனும் மற்றொரு பிரிவு பாஜகவுடனும் இணைந்து போட்டியிட்டன.
தற்போதைய தேர்தலில் 145 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் கடந்த 2019 தேர்தலில் பாஜக 162 இடங்களில் களம் கண்டு 105 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. பாஜக அணியிலுள்ள சிவசேனா ஷிண்டே பிரிவு 81 இடங்களில் போட்டியிட்டு 57 இடங்களில் வென்றுள்ளது. இந்த அணியிலுள்ள தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியதில் அதில் 41 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
மறுமுனையில் மகாவிகாஸ் அகாடி அணியில் காங்கிரஸ் 102 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் 147 வேட்பாளர்களை நிறுத்தியதில் அதில் 44 பேர் வெற்றிபெற்றிருந்தனர். காங்கிரஸ் அணியில் சிவசேனா உத்தவ் பிரிவு 92 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி 20 இடங்களை கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 86 வேட்பாளர்களை நிறுத்தியதில் 10 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இதில் சுவாரசியமான தகவலாக கடந்த முறை பிளவுறாத சிவசேனா 56 இடங்களில் மட்டுமே வென்றிருந்த நிலையில் தற்போது பிளவு பட்ட சிவசேனாவின் இரு அணிகளும் சேர்த்து முன்பு பெற்றதை விட அதிகமான இடங்களை அதாவது 77 இடங்களை பெற்றுள்ளது. அதே நேரம் கடந்த முறை பிளவுபடாத தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வென்றிருந்த நிலையில் இம்முறை அக்கட்சியின் இரு பிரிவுகளும் 51 இடங்களை பெற்றுள்ளன.