கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மதுக்கடையை மூடக்கோரி, குடித்துவிட்டு பஞ்சாயத்து கட்டடத்தின் மீது ஏறி ஒருவர் ரகளை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுக்கா கக்கானூர் கிராம பகுதியில் காகப்பா மதரா என்ற குடிமகன் குடித்துவிட்டு சரக்கு விற்பனை செய்வதை தடை செய்யுங்கள் என்று ரகளை செய்துள்ளார்.
பஞ்சாயத்து கட்டிடத்தின் மேல் ஏறி நின்று ரகளை செய்தவர், ”அரசாங்கத்திடம் நான் வீடு கேட்கவில்லை, வயல் கேட்கவில்லை. பீர், சரக்கு விற்பனையை மட்டும் தடை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் கிராமத்தில் சட்டவிரோதமாக பீர் மற்றும் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை மூட வேண்டும் என வலியுறுத்தி, தடை செய்யாவிட்டால் குதித்து தற்கொலை செய்துவிடுவேன் என ரகளை செய்துள்ளார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக பஞ்சாயத்து கட்டிடத்தின் மேல் அமர்ந்து பீர் குடித்துவிட்டு ரகளை செய்தவரை, ஊர் பெரியவர்கள் கட்டிடத்தின் மேலே சென்று சமாதானம் செய்து அவரை கீழிறக்கினர்.
குடி போதையில் காகப்பா செய்த ரகளை சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.