இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டே தொடங்கிவிட்டது. இந்தியா உடனோ பாகிஸ்தானுடனோ சேர முடியாது என காஷ்மீர் 1947ல் கூறியது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தம் பகுதி பழங்குடியினரை தூண்டிவிட்டு காஷ்மீர் மீது போர் தொடுக்க வைத்தது. இதனால் அஞ்சிய காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் தமது ராஜ்ஜியத்தை இணைக்க சம்மதித்தார்.
இதையடுத்து காஷ்மீருக்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய படைகள் பாகிஸ்தானுடன் நேரடி மோதலை தொடங்கின. 1948 வரை நீடித்த போரில் பாகிஸ்தான் படைகள் பேரிழப்பை சந்தித்தன. எனினும் ஐநா தலையிட்டு இம்மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தப் போரால் காஷ்மீர் இந்தியாவின் வசமானது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 2வது போரும் காஷ்மீர் விவகாரத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. 1961ல் சீனாவிடம் நடந்த போரில் இந்தியா தோல்வியடைந்திருந்ததால் அதை எளிதில் வீழ்த்திவிடலாம் எனக் கணித்த பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான், 1965ல் தம்முடைய படைகளை இந்தியாவிற்குள் மாறுவேடத்தில் ஊடுறுவ வைத்தார்.
ஆனால் இந்திய படைகளும் முழுவீச்சில் பதிலடி தந்தன. 17 நாள் நடந்த இந்தப் போரில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் போர் நிறுத்தம் செய்ய சர்வதேச நிர்பந்தங்கள் இந்தியாவை அழுத்தம் தந்தன. இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் அப்போதைய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி காலமானார். இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தற்போது வரை குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 3வது போர் 1971ல் நடந்தது. ஆனால் இந்த முறை கிழக்கு பகுதியிலிருந்த பாகிஸ்தானை தனி நாடாக்கும் நோக்கில் இப்போரில் இந்தியா ஈடுபட்டது. 13 நாட்கள் மட்டுமே நடந்த இந்தப் போரில் பாகிஸ்தான் படைகளை இந்திய படைகள் பந்தாடின. சுமார் 93 ஆயிரம் பாகிஸ்தானிய ராணுவத்தினரை இந்திய படைகள் சிறைபிடித்தன. இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் படைகள் இந்தியாவிடம் சரணடைவதாக கூறியதால் போர் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி பங்களாதேஷ் என்ற பெயரில் தனி நாடாக உருவெடுத்தது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 1999ம் ஆண்டு போரில் ஈடுபட்டன. காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுறுவிய பாகிஸ்தான் படைகள் அப்பகுதியை ஆக்கிரமித்தன. இந்திய படைகளும் பதிலடி கொடுத்த நிலையில் சண்டை 2 மாதங்கள் வரை நீண்டது. இதில் பெரும்பகுதியை இந்திய படைகள் மீட்ட நிலையில் மேற்கொண்டு போரை நடத்த இயலாத அளவுக்கு பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.
மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் நிர்பந்தம் தந்ததால் பாகிஸ்தான் படைகள் கார்கிலை விட்டு வெளியேறின. தற்போதும் இந்தியாவுடன் பாகிஸ்தான் நேரடியாக மோதவில்லையே தவிர மறைமுகமாக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு அவ்வப்போது சண்டை நடத்திக்கொண்டுதான் உள்ளது