அசாமில் வெள்ள நீரில் தனது பைக்கோடு ஒருவர் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக தற்போது 24 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலுள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன.
வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளைநிலங்கள் மோசமாக சிதைந்துள்ளதுடன் சுமார் 47 ஆயிரம் பேர் வீடிழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 649 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 110 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அசாமில் வெள்ள நீரில் தனது பைக்கோடு ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. வெள்ள நீரால் உடைந்த சாலையின் நடுவே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரப்பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டிச் செல்கிறார். ஆனால் தடுமாறும் அவர் நீரில் விழுகிறார். ஓடும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாக் இரு சக்கர வாகனத்தோடு அவரும் அடித்து செல்லப்படுகிறார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது என கூறப்படும் நிலையில் இதனை பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் ஒருவர், இது அசாமில் நடந்த நிகழ்வு எனவும், அந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்