இந்தியா

கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்ட 93 பேர் விதிகளை மீறியுள்ளனர் - குஜராத்

கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்ட 93 பேர் விதிகளை மீறியுள்ளனர் - குஜராத்

webteam

குஜராத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 93 பேர் அதனை மீறி வெளியே வந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி இதுவரை 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. பலரும் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியான பின்னரே அவர்கள் வெளியில் நடமாடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தாமாகவே முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேன்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 93 பேர் அதனை மீறி வெளியே வந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 433 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், 6,092 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

அரசின் அறிவுறுத்தலை மீறி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொரோனாவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அரசு கூறியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உங்களையும் குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.