உத்தராகண்ட் முகநூல்
இந்தியா

உத்தராகண்டில் தீடீரென வீசிய பனிப்புயல்.. டிரக்கிங் சென்ற 9 மலையேற்ற வீரர்கள் பரிதாப உயிரிழப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தராகண்டில் தீடீரென வீசிய பனிப்புயல் காரணமாக, டிரக்கிங் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் மனேரியில் உள்ள ஹிமாலயன் வியூ ட்ரெக்கிங் ஏஜென்சியை சேர்ந்த மூவர், கர்நாடகாவைச் சேர்ந்த 18 பேரையும், மகராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 பேர் கொண்ட குழுவை மலையேற்றத்திற்காக கடந்த மே 29 ஆம் தேதி உத்தரகாசியிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், மே 29 ஆம் தேதி அன்று சஹஸ்த்ராவிற்கு வழிகாட்டிகளின் உதவியுடன் மலையேற்றத்திற்காக வந்தவர்கள் ஜீன் 7 ஆம் தேதி மலையேற்றம் முடிந்து வீடு திரும்பலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மாலை 4 மணி அளவில் இவர்கள் சென்ற மலைப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதால் கடும்பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதனால்,15,000 அடி உயரத்தில் தப்பிக்க முடியாமல் இவர்கள் சிக்கி தவித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களை மீட்க என்டிஆர்எஃப் வீரர்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது, 13 பேர் பேர் மீட்கப்பட்டநிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறுகையில், “மலையேற்ற குழுவினர் இலக்கை அடைந்து மீண்டும் முகாமுக்கு திரும்ப முயன்றபோது கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் பனிப்புயலில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தரகாண்ட் அரசுக்கும், இந்திய மலையேற்ற கூட்டமைப்புக்கும், மத்திய அரசின் உள் துறைக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் புஷ்கர் சிங் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக கர்நாடகாவைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.