இந்தியா

ஆந்திராவில் விபத்து: டிராக்டர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் விபத்து: டிராக்டர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

webteam

ஆந்திராவில் விவசாய பணிகள் முடிந்து சென்றவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மின்கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் நாலுகு உப்பலபாடு என்ற கிராமத்தில் மிளகாய் பறிக்கும் விவசாய பணிக்கு 30 பேர் சென்றுள்ளனர். பணி முடிந்து இரவு 8 மணியளவில் டிராக்டர் ஒன்றில் ஏறி அவர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சாலையின் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதில்,மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்தது. இதனால், டிராக்டரில் இருந்த அனைவரின் மீதும் மின்சாரம் தாக்கியது.

உடனடியாக அப்பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர், மின்சாரத்தை துண்டித்து, டிராக்டரில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை டிராக்டரில் ஏற்றி உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநில ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிசந்தன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.