ஹைதராபாத்தில் கனமழையால் இடிந்து விழுந்த சுவரில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பேகம் பஜார், பேகம்பேட்டை, டோலிச்சோவ்கி, ஷெய்க்பேட்டை, மெஹ்திபட்னம், செர்லப்பள்ளி, மல்லாபூர், மவுலா அலி உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கின. மேலும், சோமாஜிகுடா, எர்ரம் மன்சில், மற்றும் விஜயநகர் காலனி ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் நுழைந்தது. இந்த கனமழையால் ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து அருகிலிருந்த 10 வீடுகளின் மீது விழுந்தது.
இதில் 3 குழந்தைகள் உடபட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் எம்பி அசாதுதின் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுவர் இடிந்து விழுந்த விபத்து பகுதியை ஆய்வு செய்தேன். 9 பேர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் கூறுகையில், “கற்பாறைகளால் ஆன பெரிய சுவர் இடிந்து 10 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இச்சம்பவம் இரவு 11 அளவில் நடைபெற்றுள்ளது. இரண்டு வீடுகள் மோசமாகியுள்ளன. 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் மற்ற வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.