இந்தியா

டெல்லி வன்முறையில் 86 காவலர்கள் காயம்... கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிப்பு!

டெல்லி வன்முறையில் 86 காவலர்கள் காயம்... கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிப்பு!

kaleelrahman

டெல்லியில் விவசாயிகள் பேரணி வன்முறையில் முடிவடைந்த நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். வன்முறையில் 86 காவல்துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய அவசர ஆலோசனையில், டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அமித் ஷா உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.


இதற்கிடையில் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளில் பெரும்பாலானோர் தங்கள் முகாம்களுக்கு திரும்பியுள்ளனர். வன்முறை மற்றும் கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி காவல்துறை, 86 காவல் துறையினர் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் அனுமதியளிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பேரணியை தொடங்கியதாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த காவல்துறையினரில் பலருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறைக்கு சொந்தமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக காவல்துறை சார்பில் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.