இந்தியா

டெல்லியில் ரத்தான 82 விமானங்கள் : அதிருப்தி அடைந்த பயணிகள்

டெல்லியில் ரத்தான 82 விமானங்கள் : அதிருப்தி அடைந்த பயணிகள்

webteam

டெல்லியில் 82 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்தியாவில் 2 மாத கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, உள்நாட்டு விமானச் சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்தச் சேவைக்கு பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தமிழக அரசு 25 உள்நாட்டு விமானங்களை மட்டுமே தமிழகத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ளது. மும்பைக்கு தினந்தோறும் 50 விமானங்களை மட்டும் இயக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் அனுமதி அளிக்கவில்லை என்பதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையத்தின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் புயல் பாதிப்பால், மே 28ஆம் தேதிதான் விமான நிலையச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பீகார், பஞ்சாப், அசாம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்கு வரும் விமானப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் இன்று டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் டெல்லிக்கு வரவிருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்தாகின. இந்த தகவல் கடைசி சில நிமிடங்களுக்கு முன்னரே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் தங்களின் முக்கிய நிகழ்ச்சிகளை தவறவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.