இந்தியா

மாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை

மாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை

webteam

மாலை போட்டு, ரிப்பன் கட்டி 80வது பிறந்த நாளை யானை ஒன்று கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களை சுற்றி வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் வசித்து வரும் 80வது வயது யானையின் பெயர் ராணி. இந்த யானைக்கு நேற்றுடன் 80வது நிறைவடைகிறது. அத்துடன் அந்த உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டு 55 வருடங்கள் நிறைவடைகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுடன் சேர்த்துக்கொண்டாட உயிரியல் பூங்காவின் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதற்காக சில கிலோ எடையுள்ள பெரிய அளவு கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர். அந்தக் கேக்கை யானை ராணியைக்கொண்டே வெட்ட வைத்துள்ளனர். கேக்கை வெட்டுவதற்கு முன்னர் ராணிக்கு மாலை அணிவித்து, கால்களில் ரிப்பன் அலங்கரித்துள்ளனர். 

ராணி கேக் வெட்டும்போது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ராணி என்ற இந்த யானை அந்த உயிரியல் பூங்காவிலுள்ள பாலுட்டி விலங்குகளிலேயே வயதில் மூத்த உயிரிணம் ஆகும். இதேபோன்று இன்னும் 4 யானைகள் அங்கு உள்ளன. ஆனால் அவற்றில் மூத்த யானை ராணி என்பதால், இங்கு அதற்கு மட்டும் தனி கவனிப்பும், ஊழியர்களின் பாசமும் கிடைக்கின்றது. ஹைதராபாத் உயிரியல் பூங்கா 1963ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போது, ஹைதராபாத் நிஸாம் மன்னர் பூங்காவிற்கு கொடுத்த பரிசு தான் இந்த ராணி. உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டு, தற்போது வரை ராணி அங்கே இருந்து வருவதால் அதன்மீது பூங்காவின் ஊழியர்கள் அனைவரும் அதிக பாசம் வைத்துள்ளதாக அங்கு பணிபுரியும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

ராணியை ஆரோக்கியமாக இருக்க வைப்பதற்காக அதற்கு எந்தவித செயற்கை உணவுகளும் வழங்கப்படுவதில்லை. ராணியும் வாழைப்பழங்கள் மற்றும் தேங்காய்களையே விரும்பி உண்ணுவதாக உயிரியல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ராணியை பார்த்துக்கொள்ளும் ஊழியர் எப்போது உணவு வழங்க வந்தாலும், ராணி அவருக்கு காலை தூக்கி கைகொடுக்கும் என்று கூறுகின்றனர். அங்கிருக்கும் 5 யானைகளுக்கும் ஒரே நேரத்தில், ஒரே அளவிலும் உணவுகளை வழங்குகின்றனர். சில நேரங்களில் மற்ற யானைகளுக்கு உணவு வழங்க தாமதம் ஏற்பட்டால் அந்த தருணங்களில், ராணி தனது உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்ளும் எனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.