மக்களின் இயல்பு வாழ்க்கையை ஒருபுறம் கொரோனா அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலும், இந்தக் கொரோனா பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது. மனிதம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்கள் தினம் தினம் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு, லக்னோவில் நடந்துள்ளது.
லக்னோ ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர் முஜிபுல்லா. இவருக்கு வயது 80. எண்பது வயதில் ஒருவர் உழைப்பதே ஆச்சரியம் என்றால், முஜிபுல்லா தன்னுடைய உழைப்பால் பலருக்கு உதவியையும் செய்து வருகிறார். ரயில்களில் வந்து இறங்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம் பணம் வாங்காமல் அவர்களது உடைமைகளை சுமந்து செல்கிறார் முஜிபுல்லா.
'உருவத்தில் தான் வயதாகிவிட்டது, மனதி இல்லை' என்று சொல்லாமல் சொல்லும் முஜிபுல்லா ஒருநாளைக்கு 8முதல் 10 மணி நேரம் உழைக்கிறார். சுமைகளை இலவசமாகத் தூக்கிச் செல்வது மட்டுமல்ல, ரயில் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு நீரும் கொடுத்து வருகிறார்.
முஜிபுல்லாவை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ள இணையவாசிகள் மனிதம் இன்னும் வாழ்வதற்கு இவரே சாட்சி எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்தான் உண்மையான ஹீரோ என்றும், இவர் தங்கமனம் படைத்தவர் என்றும் புகழ்ந்துள்ளனர்