street dogs pt web
இந்தியா

நாய்க்கடிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த தாய்; 15 நாட்களில் குழந்தையை பறிகொடுத்த சோகம்

உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் தெருநாய் கடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

உத்தரப்பிரதேசத்தில் பூனம் என்ற 8 வயது சிறுமி சுமார் 2 வாரங்களுக்கு முன் பினாஹட்டில் உள்ள தனது கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இது குறித்து அவர் வீட்டில் சொன்னபோது, அவரின் தாய் சிறுமியை எந்த மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை. சுமார் 15 தினங்களுக்கு பின் ரேபிஸ்க்கான அறிகுறி தோன்றியபோது அவர்கள் பொது சுகாதார மையத்தை அணுகியுள்ளனர்.

நோய் தீவிரமானதால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை ஆக்ராவில் உள்ள மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டார்.

இது குறித்து ஆக்ராவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், “நாய் கடித்தது குறித்து சிறுமி தனது தாயை தவிர குடும்பத்தில் இருந்த வேறு யாருக்கும் சொல்லவில்லை. குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக அவரது தாய் வீட்டிலேயே சில வைத்தியம் செய்துள்ளார். நோய் தீவிரமடைந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ரேபிஸ் நோய் குறித்து புதிய தலைமுறையிடம் கால்நடை மருத்துவர் சிக்கலிங்கம் ரங்கநாதன் கூறுகையில், “நாய்க்கடித்து 12 மணிநேரத்திற்குள் மருத்துவரை அனுகி ‘இம்யூனோ க்ளோபுளின்’ அல்லது ‘ஆண்டி ரேபிஸ் சீரம்’ போட்டுக்கொண்டால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். போலவே நாய்க்கடித்த பின் 3-ம் நாள், 7-ம் நாள், 14-ம் நாள், 19-ம் நாள், 21-ம் நாள் இதேபோல மருந்து எடுக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தையும் பின்பற்றினால், ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து மனிதர்கள் பிழைக்கலாம். இதில் ஏதாவதொன்றை கைவிட்டால்கூட, பின் பிழைப்பது கஷ்டம்தான்” என தெரிவித்துள்ளார்.