இந்தியா

8 ஆண்டுகளில் எரிபொருள் வரி மூலமாக இத்தனை கோடி வசூலா? - ப. சிதம்பரம் ட்வீட்

8 ஆண்டுகளில் எரிபொருள் வரி மூலமாக இத்தனை கோடி வசூலா? - ப. சிதம்பரம் ட்வீட்

ஜா. ஜாக்சன் சிங்

பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் எரிபொருள் வரிகள் மூலமாக மக்களிடம் இருந்து ரூ.26.51 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயரத் தொடங்கியிருக்கிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரிகளாக மக்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 51 ஆயிரத்து 919 வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.

இதை வைத்து பார்க்கும்போது, ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக தலா ரூ. 1 லட்சத்தை அரசு வசூல் செய்துள்ளது. ஒரு சராசரி குடும்பத்திற்கு, இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது?

எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.