இந்தியா

144 தடை - உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த கூலித்தொழிலாளியின் 8 வயது மகன்

144 தடை - உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த கூலித்தொழிலாளியின் 8 வயது மகன்

webteam

144 தடை உத்தரவால் சரியான சிகிச்சை கிடைக்காத நிலையில் கூலித்தொழிலாளியின் 8 வயது மகன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன. இந்தியாவும் கொரோனாக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டம் கூடுவதால் கொரோனா பரவாமலிருக்க இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, ரயில், கார், ஆட்டோ எதுவும் ஓடவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் 144 தடை உத்தரவால் சரியான சிகிச்சை கிடைக்காத நிலையில் கூலித்தொழிலாளியின் 8 வயது மகன் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் ஆனந்த்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மனோகர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவருடைய மூத்த மகன் தேவாவுக்கு சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. தற்காலிக குடிசையில் தங்கி இருந்த மனோகர் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் 144 தடை உத்தரவால், வருமானம் ஏதும் இல்லாமல் அவர் இருந்துள்ளார். இதனையடுத்து உடல்நிலை சரியில்லாத மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சை தேவை என்பதால் வேறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஹிந்துபுர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவாவை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். ஆனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் குர்நூல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்குள் சிகிச்சை பலனின்றி தேவா உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அரசு ஆம்புலன்ஸ் ஏதும் கிடைக்காத நிலையில் அங்கிருந்தவர்களிடம் பணம் வாங்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு மகனின் உடலை கொண்டு சென்றுள்ளார்.

இறுதி சடங்கிற்கும் பணம் இல்லாத நிலையில் கைகளில் தாங்கி உடலை மயானம் வரை கொண்டு சென்றுள்ளார். 144 போன்ற இக்கட்டான நேரங்களில் ஆதரவற்றவர்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.