சம்பவம் நடந்த இடம் எக்ஸ் தளம்
இந்தியா

காசியாபாத்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; விபத்தில் தங்கையை காப்பாற்றி தன்னுயிரை விட்ட 8 வயது சிறுவன்!

காசியாபாத்: விபத்து ஒன்றில் சிறுவன் தனது தங்கையை காப்பாற்றிவிட்டு, தான் உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jayashree A

‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை...’ என்று அவ்வையார் சொன்னது போன்று, பத்து வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர்கள் யாசகம் கேட்டு வாழ்க்கையை நடத்துவது என்பது மிகவும் துயரமான ஒன்று. இதில் அவர்கள் படும் வேதனைக்குரிய சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் நடந்துள்ளது.

காசியாபாத் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர் சிறுவர்களான அன்மோல் (8) மற்றும் அவரது தங்கையான ரேஷ்மா. இவர்களது தந்தை இவர்களை விட்டு பிரிந்து சென்று நேபாளில் வசிப்பதாக கூறப்படுகிறது. தந்தை பிரிந்து சென்றதும், தாய் மதுவுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் இருவரும் அன்றைய வாழ்க்கையை நடத்தவேண்டி தெருவோரங்களில் யாசகம் பெற்று, கிடைத்தத் தொகையினில் தனது தாயையும் காப்பாற்றி வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று (புதன்கிழமை) மதியம் சுமார் 3.15 மணியளவில் சிறுவர்கள் அன்மோல், ரேஷ்மாவும் யாசகம் பெற்ற பணத்தில் தனது தாயாருக்கு உணவினை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அச்சமயம், காசியாபாத் ஹைவேயில் அதிகவேகத்துடன் ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. சிறுவர்களை பார்த்ததும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் நீண்ட ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு சக்கர வாகனத்தின் வேகமானது குறையவில்லை.

இந்நிலையில், அன்மோல் இரு சக்கர வாகன வேகத்தின் தீவிரத்தை உணர்ந்து, தனது அருகில் இருந்த தங்கையை காப்பாற்றும் பொருட்டு சாலையிலிருந்து தள்ளி விட்டுள்ளார். அதில் ரேஷ்மா தூர சென்று விழுந்துள்ளார். ஆனால் அன்மோலுக்குதான் ஓடி தப்பிக்க நேரமில்லை. அதற்குள்ளாக இரு சக்கர வாகனமானது அன்மோலின் மேல் மோதியதில் அவர் தூக்கி எரியப்பட்டு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்துள்ளார்.

உடனடியாக, அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சிறுவனை மீட்டு வைஷாலியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் இறந்த சிறுவனுக்காக யாரும் வழக்கு தொடுக்கவில்லை. இருப்பினும் விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேரமாவின் உதவியுடன், விபத்தை ஏற்படுத்திய நபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.