இந்தியா

பிரிட்டனிலிருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் - உருமாறிய தொற்றா என பரிசோதனை

பிரிட்டனிலிருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் - உருமாறிய தொற்றா என பரிசோதனை

JustinDurai

பிரிட்டனில் இருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அங்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டனின் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரிட்டனில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பிரிட்டனில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மாதிரி புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைலஜா மேலும் கூறுகையில், ‘’கேரளாவின் நான்கு விமான நிலையங்களிலும் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மாதிரியில் சில மாறுபாடுகள் இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஆனால் இது பிரிட்டனில் பாதிப்பை ஏற்படுத்திய வைரசுடன் தொடர்புடையதா என்று தெரியாது. நிபுணர்கள் இது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், மக்கள் பீதி அடையத் தேவையில்லை, ஆனால் மக்கள் தீவிர விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.