மாநிலங்களவையின் மரியாதையை உதாசீனம் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டனர்.
விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் வணிக மசோதா 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020ஆகிய இரண்டு மசோதாக்களும் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்சின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பேரவை விதிகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து எரிந்தனர். இதனால் கடும் அமளி நிலவியது. கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அவையின் விதியை மீறி நடந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரெய்ன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத் நசிர் உசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கே.ராகேஷ், இளமாறன் கரீம், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோரை ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். மாநிலங்களவையிலிருந்து எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடைநீக்கத்திற்கு ஆளான 8 எம்பிக்களும், அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்பிக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் 8 எம்பிக்களும் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.