பிரபு படேல் ட்விட்டர்
இந்தியா

8 மாதம்தான்! பாஜக கூட்டணிக்கு சென்ற பிரபுல் படேல் மீதான ஊழல் வழக்கிற்கு மூடுவிழா நடத்தும் சிபிஐ!

மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பமாக கருதப்படும் அந்த பிளவில், பிரபுல் படேல் முக்கிய பங்கு வகித்தார் என கருதப்படுகிறது.

PT WEB

கணபதி சுப்ரமணியம்

சரத் பவார் தலைமையில் செயல்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து எதிர் கூட்டணிக்கு தாவிய அஜித் பவாரின் நெருங்கிய சகாவான பிரபுல் படேலுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வந்த விமான வாடகை முறைகேடு வழக்குக்கு மூடு விழா நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி நடைபெற்ற போது பிரபுல் படேல் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது தேவையற்ற விமானங்களை வாடகைக்கு எடுத்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 840 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக 2017 ஆம் வருடத்தில் சிபிஐ பிரபுல் படேலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கை தற்போது முடித்து வைக்க சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது அரசியல் ரீதியான சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பிரபுல் படேல் சென்ற வருடம் ஜூலை மாதத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக பிளந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கனடா கல்விக்கு 'NO' சொல்லும் இந்தியர்கள்.. 5 ஆண்டுகளில் 8% குறைந்த மாணவர் எண்ணிக்கை.. பின்னணி என்ன?

சரத் பவார் தலைமையில் செயல்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய அஜித் பவார், கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து, துணை முதல்வர் பதவியை பெற்றார். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனரான சரத் பவாரின் மூத்த சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பமாக கருதப்படும் அந்த பிளவில், பிரபுல் படேல் முக்கிய பங்கு வகித்தார் என கருதப்படுகிறது. பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு சில மாதங்களிலேயே, பிரபுல் படேல் சிபிஐ வழக்கிலிருந்து வெளிவந்துள்ளது அரசியல் ரீதியாக விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

பிரபுல் படேல் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக விமானங்களை கொள்முதல் செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழலில் ஏர் இந்தியாவுக்கான புதிய போயிங் 777 ரக விமானங்கள் இந்தியாவுக்கு ஒரு வருடத்தில் வர இருந்த நிலையில், ஐந்து வருடங்களுக்கு இதே ரக விமானங்களை வாடகைக்கு எடுத்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது? மேலும் இந்த விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாமலே, போயிங் 777 விமானங்களை வாடகைக்கு எடுத்து முழுக்க பயன்படுத்தாமல் வைத்திருந்ததால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த கருணாஸ் படநடிகை: அமராவதியில் மீண்டும் போட்டி..வலுக்கும்எதிர்ப்பு! நவ்நீத் ராணா யார்?

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதி அன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அப்போது சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். நீதிமன்றம் அனுமதி அளித்தால், அதன் பிறகு இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெறாது என்பதால் பிரபுல் படேல் மீது எந்த குற்றமும் இல்லை என முடிவாகிவிடும்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து, பின்னர் அவர்கள் பாஜகவுடன் கைகோர்த்தால் அந்த வழக்குகளை கைவிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சி ஒரு பெரிய சலவை இயந்திரம் போல செயல்பட்டு, தன் பக்கம் வரும் தலைவர்கள் மீதான புகார்கள் மீது விசாரணை நடைபெறாமல் தடுப்பதாக அவர்கள் விமர்சனம் செய்தனர்.

இதையும் படிக்க: அதிர்வலையை உண்டாக்கிய சர்ச்சை பதிவு: உ.பி. பிரபலத்துக்கு சீட் தராத காங்கிரஸ்.. நடந்தது என்ன?