இந்தியா

கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 8 பேர் பலியான சோகம்

கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 8 பேர் பலியான சோகம்

சங்கீதா

கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் பவகடா என்ற இடத்தில் இந்தப் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பவகடாவில் இருந்து யல்லப்பா நயகனா ஹோசகோட் நோக்கி தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாக தெரிகிறது. பேருந்துக்குள் 60 பேர் இருந்ததாகவும், பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து சிலர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

பேருந்து பளவள்ளி டவுன் பகுதியில் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சுமார் 70 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதே கோர விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.