ரூப் கன்வர் முகநூல்
இந்தியா

இந்தியாவின் ‘கடைசி Sati வழக்கு’ | 37 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான 8 பேர்... அதிர்ச்சி பின்னணி!

37 வருடங்களுக்கு பிறகு ரூப் கன்வர் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 8 பேரையும் போதிய ஆதாரம் இல்லை என்று, தெரிவித்து விடுதலை செய்துள்ளது ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

37 வருடங்களுக்கு பிறகு ரூப் கன்வர் ‘சதி’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 8 பேரையும் போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்து விடுதலை செய்துள்ளது ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம்.

இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டோடு தொடர்புடையது...

ரூப் கன்வர்

அழகான குடும்பம்... ஆறு உடன் பிறந்தவர்களில் கடைக்குட்டிதான் ரூப் கன்வர் என்னும் 18 வயது பெண்... ஜனவரி 18, 1987 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள சிகாராவின் தில்ராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெறுகிறது. மகிழ்ச்சியாக செல்கிறது இவர்களின் வாழ்க்கை.

ஆனால், திருமணமாகி எட்டு மாதங்களிலேயே ரூப் கன்வரின் கணவரான மால் சிங் நோய்வாய்ப்பட... சிகாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல் நிலை மோசமடையவே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்..

கணவனை இழந்த மனைவி, தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தானும் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளுதல், உடன்கட்டை ஏறுதல் (எ) சதி எனப்படுகிறது. இது வழக்கமாகவும், சடங்காகவும் இந்தியாவில் முற்கால இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இதிகாச காலத்திலிருந்தே இந்தியாவில் இது இருந்து வந்தது. ராஜாராம் மோகன்ராய் போன்றோர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, 1829 - ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தைத் தடை செய்தார். ஆனால், அதன் பிறகும் ஆங்காங்கே இந்தக் கொடூர நடைமுறை இருக்கத்தான் செய்தது. சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் இதற்கென தனி பிரிவு இல்லாமல் இருந்ததும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

‘சதி மாதா கி ஜெய்’

‘கணவன் இறந்தபின் மனைவி துயரம் தாளாமல் தானே தீயில் விழுவார்’ என்று சொல்லப்படும் இந்த சடங்கு, உண்மையில் மதத்தின் பெயரில் ஆணாதிக்கத்தால் நிகழ்த்தப்பட்ட கொடுமையே. அப்படிதான், செப்டம்பர் 4, 1987 இல் தனது கணவரை இழந்த ரூப் கன்வாரும், திருமணத்தன்று அணிந்த உடைகள், நகைகள் அனைத்தையும் தேடியெடுத்து அணிந்து கொண்டார் என்றும், தானே முன்வந்து உடன் கட்டை ஏறி இறந்ததாகவும் கூறப்பட்டது. ரூப் தீயில் விழுந்தபோது ‘சதி மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டு இக்கொலையை அரங்கேற்றியிருக்கின்றனர் சுற்றி இருந்தவர்கள்.

குறிப்பாக, அவர் உடன் கட்டை ஏறியதை யாரும் தடுக்கவும் இல்லை. இப்படி உயிர் பறிக்கப்படுவது குறித்த குற்றவுணர்சியும் அங்கிருந்த யாருக்கும் இல்லை. காரணம்... பாரம்பரியம், சம்பர்தாயம், நம்பிக்கை! ஒரு பெண் கணவனின் உடலுடன் உடன்கட்டை ஏறினால் அது அப்பெண்ணின் / அவள் திருமணம் செய்து சென்ற குடும்பத்தின் / அந்த ஊரின் பெருமை!

இதை உணர்ந்த சமூக செயற்பாட்டாளர்களும், பெண் நலனில் அக்கறை கொண்டவர்களும் நடந்த இந்த சம்பவம் கட்டாய சதி என்று புகாரளித்தனர். குறிப்பாக, ரூப் கன்வர் வலுக்கட்டாயமாக சதிக்குள் தள்ளப்பட்டதாக இந்தியா முழுவதிலுமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த நிகழ்வு நடந்த 10 நாட்களுக்கு பிறகு அம்மாநில முதல்வர் பொறுப்பின்றி, “மக்களின் வழிபாட்டைத் தடுக்க முடியாது” என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மகளிர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. ‘விதவைகள் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்; இது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்’ என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், ரூப் கன்வர் வற்புறுத்தி உடன்கட்டை ஏற்றப்பட்டார் என்பது நிரூபணமானது. இதற்கு காரணமாக செரூப் கன்வரின் மாமனார், மைத்துனனும் கைது செய்யப்பட்டனர். ஆனால், 1996 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர்கள் இருவரும் ஆதாரம் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சட்டத்திருத்தம்

இதற்கிடையே, ரூப் உடன்கட்டை ஏறிய அதே ஆண்டில் 1987 அக்டோபர் 1 அன்று சதி சட்டத்திருத்தம் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1988-ல் இந்தப் புதியச் சட்டம் முழுமையாக அமலுக்கும் வந்தது.

அதில், உடன் கட்டை ஏறுவது மட்டுமல்ல அதை புனிதப்படுத்த நினைப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்பட்டது. மேலும் இதை மீறினால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 30,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று இயற்றப்பட்டது. இதனால் ,ரூப் கன்வரின் வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காக மாறியது.

புனிதப்படுத்த சடங்கு

இருப்பினும், ரூப் கன்வர் இறந்து ஓராண்டு நினைவு நாள் வந்தபோது, அந்த தினத்தில் சதியை புனிதப்படுத்தும் விதமாக, ரூப் கன்வரின் உறவினர்களான 45 பேர் சடங்குகளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் ரூப் கன்வரின் மரணத்தைப் புனிதப்படுத்தி அந்த ஊர் மக்கள் ‘சதி மாதா’ என்ற கோயிலையும் கட்டினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மீண்டும் பூதாகரமாக குற்றச்சாட்டுகள் கிளம்பவே, இதில் தொடர்புடைய 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணை மேற்கொளப்பட்டதில், 2004 ஆம் ஆண்டும், 25 பேர் எந்தவித ஆதராங்களும் இல்லை என்றும் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள். 6 பேர் ஜாமீன் கிடைத்தப்பிறகு தலைமறைவாகினர். மீதமிருந்தது எட்டு பேர் மட்டுமே.

இந்த நிலையில்தான், கடந்த புதன்கிழமை மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேரை போதிய ஆதாரங்கள் வழங்கப்படவில்லை என்று கூறி சதி நிவாரண நீதிமன்ற சிறப்பு நீதிபதி அக்ஷி கன்சால் விடுதலை செய்து உத்தரவிட்டார்.