பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் வழக்கமான உற்சாகத்துடன் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் நடக்கும் தேசிய கொடியேற்றும் மற்றும் கொடி இறக்கும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி - வாகா எல்லையில் நடந்த கலை நிகழ்ச்சிகளை திரளான மக்கள் கண்டுகளித்தனர். ராணுவத்தினரின் இசை வாத்தியங்கள், மாநில கலாசாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் என எல்லையில் சுதந்திர தினம் களைகட்டியது.
மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்த பொதுமக்களும் ஆரவாரத்துடன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் நடந்து வந்து தேசிய கொடியை இறக்கி வைத்தனர்.
இந்நிகழ்வையும் அங்கு திரண்டிருந்த திரளான இந்திய மக்கள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வீரர்கள் வீறுநடைப் போட்டு தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தியது அங்கிருந்த மக்களை மிகுந்த ஆரவாரமடைய வைத்தது.