இந்தியா

72 வயதிலும் பூக்கள் விவசாயம்: ஊரடங்கிலும் வருமானம் பார்த்த கேரளக்காரர்

72 வயதிலும் பூக்கள் விவசாயம்: ஊரடங்கிலும் வருமானம் பார்த்த கேரளக்காரர்

webteam

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரண்முல்லா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர், 72 வயதாகும் முன்னாள் பொறியாளர். பாம்புப் படகுகளுக்குப் பிரபலமான அரண்முல்லா கிராமத்தில் சாமந்தி பூக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு ஊரடங்கு காலத்திலும் லாபம் சம்பாதித்துள்ளார்.

இங்குள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தில் ஆயிரக்கணக்கான சாமந்திப் பூக்கள் பூத்துச் சிரிக்கின்றன. ஊரடங்கு காலத்தில்கூட கிருஷ்ணன் நாயர் ஓய்வாக வீட்டில் இருக்கவில்லை. தினமும் தன் தோட்டத்தில் இருந்து 15 கிலோ சாமந்திப் பூக்களை அறுவடை செய்திருக்கிறார்.

லிபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பல ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய நாயர், 2004ம் ஆண்டு கேரளா திரும்பினார். "என் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளில் கழித்துவிட்டேன். இங்கு வந்ததும் எனக்கு ஆர்வமுள்ள வித்தியாசமான திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தேன்" என்கிறார் கிருஷ்ணன் நாயர்.

கேரளா திரும்பியதும் சில நாட்கள் முதலீட்டாளராகப் பணியாற்றிய அவர், ஊரடங்கு நாட்களில் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சாமந்திப் பூக்கள் விவசாயம் செய்யத் தொடங்கினார். தற்போது அவருக்கு தினமும் 15 முதல் 20 கிலோ வரை பூக்கள் கிடைக்கின்றன. உள்ளூர் சந்தைகளில் சாமந்தியை விற்பனை செய்வதன் மூலம் இந்த 72 வயது விவசாயி மாதம் ரூ. 35 ஆயிரம் சம்பாதித்துவருகிறார்.