மத்தியப் பிரதேசத்தில் உயிரோடு இருந்த முதியவரை இறந்தவர் என மருத்துவர்கள் அறிவித்ததால், முதியவரை உடற் கூராய்வு அறை வரை அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 72 வயது முதியவரான காஷிராம் என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இறந்ததாக அறிவிக்கப்பட்டவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக மறுநாள் எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது அந்த முதியவரின் உடல் அசைந்ததை கண்டு அரண்டு போன மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்து முதியவர் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தினர். மருத்துவர்களின் அலட்சியமான செயல் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரோஷன் தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவித்த அவர், காஷிராம் ஜூன் 20ம் தேதி இரவு 9.30 மணிக்கு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் காலை அவர் உயிரோடு இருப்பது தெரியவந்தது. என தெரிவித்துள்ளார்.
( தலைமை மருத்துவர் ரோஷன்)
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி விக்ரம் சிங், '' மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்ததாக எங்களுக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அடுத்த நாள் சென்று பார்த்தபோது நோயாளி உயிரோடு இருப்பதாக தெரிவித்தனர். நாங்கள் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தோம். நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரோடு இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.