செய்தியாளர் ராஜூவ்
நாட்டில் போதைப் பொருள் ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவ்வபோது சர்வதேச கடல் எல்லை மற்றும் இந்திய கடல் எல்லைப் பகுதிகளுக்குள் போதைப் பொருள் கடத்தல்களை இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தடுத்து கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கடற்படை, குஜராத் பயங்கவாத எதிர்ப்புப் படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து குஜராத் கடல் பகுதியில் சுமார் 700 கிலோ மெத்தப்பட்டமைன் போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.
போர்பந்தர் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றை சோதனை செய்த போது அதில் 8 ஈரானிய நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாகவும், 700 கிலோ போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரையும் கைது செய்து போதை பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி மிகப்பெரிய கொள்ளளவுள்ள போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருளை கைப்பற்றியது தொடர்பாக பேசிய அதிகாரிகள், “கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கிலோவுக்கு ரூ. 2 முதல் 3 கோடியாக இருக்கலாம். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு ரூ. 1400 கோடி முதல் 2100 கோடி வரை இருக்கும்” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைப்புகள் இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு இவை என மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.