அன்பிற்கினியவர்களை தற்காலிகமாக பிரிவது எப்போதும் எவருக்குமே பெரும் துயரம்தான். ஆனால் பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்த துணைவியை பிரிந்த வருத்தத்தை, சோகத்தை எந்த வார்த்தைகளாலும் அடக்கிட முடியாது.
எத்தனை முறை சண்டையிட்டாலும், கோபப்பட்டாலும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்க்கையை தொடரும் தம்பதிகள் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் மறைந்த தன்னுடையை இணையை பிரிந்து வாழ முடியாத விரக்தியில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்ட உருக்கமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது.
ராஜஸ்தானின் பாரத்புர் நகருக்கு அருகே 70 வயதுடைய முதியவர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஜூலை 6ம் தேதியான இன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது வஹ்ராவலி கிராமத்தில் உள்ள ரூப்வாஸ் காவல் நிலையம் அருகே அரங்கேறியிருக்கிறது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது, சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் ஒன்று போலீசுக்கு கிடைத்திருக்கிறது.
அதில், என்னுடைய தற்கொலை முடிவு சுயமாக எடுக்கப்பட்டதுதான். இதற்கு யாரும் பொறுப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த 70 வயது முதியவர் நரேந்திர சிங் என்பது தெரிய வந்திருக்கிறது.
அவரது மனைவி பக்வான் தேய் கடந்த ஆண்டு மறைந்ததில் இருந்தே பெரும் சோகத்துக்கு ஆளான நரேந்திர சிங், சுயமாகவே தன்னுடைய வாழ்வை முடித்திருக்கிறார். அவரது தற்கொலை கடிதத்தில் என் மனைவியை பிரிந்து வாழ முடியாததால் தற்கொலை செய்கிறேன் என்றும் நரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார் என மதுரா கேட் ஸ்டேஷன் இன்சார்ஜ் ராம்நாத் குர்ஜார் கூறியுள்ளார்.
நரேந்திர சிங்கின் இந்த முடிவை அறிந்த அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.