உத்தரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

உ.பி|வேறு கண்ணில் சிகிச்சை! மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்! பெற்றோர் வேதனை!

உத்தரப்பிரதேசத்தில், இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, வலது கண்ணில் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்திருப்பது மருத்துவரின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில், இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, வலது கண்ணில் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்திருப்பது மருத்துவரின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி செக்டார் காமா 1 இல் உள்ள ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறுவனின் தந்தை கூற்றுப்படி, 7 வயது சிறுவனான யுதிஷ்டிரர் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்து வந்துள்ளது. மருத்துவரிடத்தில் அழைத்து சென்று சோதிக்கையில், கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் உள்ளது என்றும், எனவே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் ஆனந்த வர்மா தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ 45, 000 ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யுதிஷ்டிரருக்கு செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையை முடித்து வீடு திரும்பிய உடன், சிறுவன் யுதிஷ்டிரரின் தாய் யுதிஷ்டிரரின் இடது கண்ணிற்கு பதிலாக, வலது கண்ணில் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தநிலையில், மருத்துவரிடத்தில் இது குறித்து விசாரித்ததற்கு, மருத்துவ ஊழியர்கள் உட்பட மருத்துவ நிர்வாகம் என யாரும் சரியான பதில் அளிக்காமலும், அநாகரிகமாகவும் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கௌதம் புத்த நகரின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் சிறுவனின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்தான புகாரில், சம்பந்தப்பட்ட மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைக்குப் சீல் வைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டுள்ளது.. போலீஸிக்கு புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.