நேற்று தெலங்கானா மற்றும் ஹைதராபாத் மாநிலங்களில் பரவலாக கோடை மழை பெய்தது. அதிக காற்றுடன் கனமழை பெய்ததில் வாகன ஓட்டிகள் தடுமாறினர். இந்நிலையில் ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பாச்சுபள்ளியில், நேற்று பெய்த மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் மாநிலம் பாச்சுபள்ளியில் ரேணுகா எல்லம்மா என்ற காலனியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பை ரைஸ் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் கட்டிவருவதாக தெரியவந்துள்ளது. இந்த கட்டடப்பணிக்காக பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் அங்கு தங்கி கட்டுமானத்தை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பெய்த திடீர் மழையில், அடுக்குமாடி கட்டடத்தில் புதிதாக கட்டப்பட்ட 20 அடி சுவர் இடிந்து அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் மேல் விழுந்துள்ளது. இதில் 7 தொழிலாளிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இதில் 8 வயது சிறுமியும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பிற தொழிலாளர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
ஒரேயொரு ஆறுதல் தரும் செய்தியாக, மருத்துவமனையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து இவ்விபத்துக்கான காரணம் என்ன என போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரைஸ் டெவலப்பர்ஸ் முறையாக அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொண்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், போலீசார் அவற்றை சரிபார்த்து வருகின்றனர்.