இந்தியா

பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி

பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி

webteam

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனிடையே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,“இந்த வார இறுதி நாளும் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. இன்றைய துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையின்போது நமது பாதுகாப்பு படையினர் மிகவும் கவனமாக நடந்துக் கொள்ள தவறி விடுகின்றனர்” என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.