டெல்லி குழந்தைகள் மருத்துவமனை தீ விபத்து முகநூல்
இந்தியா

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து | தொடர்ந்து உயரும் பிஞ்சுகளின் உயிரிழப்பு!

டெல்லி விவேக் விஹாரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயில் கருகி 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கிழக்கு டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மைய மருத்துவமனையில், நேற்று இரவு 11.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்திலேயே அந்த தீ மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

டெல்லி - தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு  வாகனங்கள் விரைந்துவந்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மருத்துவமனையில் முதல் தளத்திலிருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7 குழந்தைகளுமே, பிறந்த சில தினங்களேயான பிஞ்சுகள் எனக் கூறப்படுகிறது. இது நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றொரு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 11.30 மணி அளவில் ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து, மருத்துவமனையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நடந்ததா, இல்லை வேறு ஏதும் காரணமா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மருத்துவமனை என்பதால் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி ஏதும் நடந்ததாக இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், டெல்லியின் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம்.

காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிப்பதில் அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க மாட்டார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில், டெல்லி காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.