Manual Scavengers File image
இந்தியா

‘இந்தியாவில் 66% மாவட்டங்கள் மட்டுமே மனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை...’- சமூகநீதி அமைச்சகம் சொல்வதென்ன?

‘இந்தியாவில் மலக்குழி மரணங்கள் இல்லை. ஆனால் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதால், ஏற்படும் விபத்துகளினால் இறப்புகள் பதிவாகின்றன’

ஜெ.நிவேதா

‘இந்தியாவில் 66% மாவட்டங்கள் மட்டுமே மனிதக்கழிவை மனிதனே அள்ளும் செயலிலிருந்து தாங்கள் விடுபட்டுவிட்டதாக தெரிவித்துள்ளன’ என்று மத்திய சமூகநீதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாராளுமன்றத்தில் மத்திய சமூகநீதி அமைச்சகம், ‘இந்தியாவில் மலக்குழி மரணங்களே இல்லை. இந்தியாவில் மனிதக்கழிவை மனிதனே அள்ளும் நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்று ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் பதிவுசெய்துவருகிறது.

இக்கருத்துடன், ‘இப்போதிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகள் சுத்தம் செய்யப்படுவதுதான்’ என்ற கருத்தையும் அமைச்சகம் கடந்த காலங்களில் அழுத்தமாக தெரிவித்துள்ளது. அதாவது பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதால், ஏற்படும் விபத்துகளினால் இறப்புகள் பதிவாகின்றன என்ற தொணியில் இக்கருத்து சொல்லப்படுகிறது.

மலக்குழி மரணங்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் 2022-ல் மக்களவையில் இதுபற்றி தெரிவித்த மத்திய அரசு, அப்போது “இந்தியாவில் யாரும் மனிதக்கழிவை கைகளால் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடவில்லை, ஆனால் 2017 மற்றும் 2021 க்கு இடையில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விபத்துகளில் 330 பேர் இறந்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்படியாக மத்திய சமூகநீதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ‘மலக்குழி மரணங்கள்’ என்பதை ‘ஆபத்தான முறையில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்வதால் ஏற்படும் மரணங்கள்’ என்பதிலிருந்து வேறுபடுத்திக்காட்டி வந்தனர்.

தற்போது இக்கருத்துக்களுடன், “இந்தியாவில் உள்ள 766 மாவட்டங்களில், 508 மட்டுமே தங்கள் மாவட்டத்தில் ‘மனித மலத்தை மனிதன் அள்ளும் நிலை இல்லை’ என அறிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது மத்திய சமூகநீதி அமைச்சகம். இது கிட்டத்தட்ட 66% மாவட்டங்கள் மட்டுமே என சொல்லப்படுகிறது. எனில், மீதமுள்ள 34% மாவட்டங்கள், இப்போதுவரை தங்களை மலக்குழியில் மனிதன் இறங்கும் செயல் இல்லையென சொல்லவில்லை. அதாவது அங்கெல்லாம் இப்போதும் இச்செயல் நடைமுறையில் உள்ளதென மாவட்ட நிர்வாகங்களே தெரிவித்துள்ளன.

மத்திய அரசு குறிப்பிடுவதாக உள்ள இந்த தகவல், மத்திய அரசின் சமூகநீதித்துறை வெளியிட்டுள்ள ‘பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை’ புத்தகத்தில் இருப்பதாக தி இந்து தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் செயலானது சட்டரீதியாக தடைசெய்யப்பட்டது. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் 2013-ன் கீழ் இது கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும், 2018 எடுக்கப்பட்ட கணக்கின்படி 58,000 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தரவுகளின் வழியே தெரியவந்தது. 1993 முதல் இச்செயலால் 941 மரணித்திருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மலக்குழியில் இறங்குவோரின் வாழ்வை மீட்க அரசு என்ன செய்தது’ என்று ஒருமுறை உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டது. அப்போது அக்கேள்விக்கு, ‘கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 58,000 பேருக்கும் ரூ.40,000 வழங்கப்பட்டது; 20,000 பேருக்கு (கண்டறியப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவு) திறமை வளர்ப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன - கடனுதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’ என அரசு பதில் அளித்திருந்தது.

நமஸ்தே திட்டம்

இவையாவும், ‘மலக்குழியில் இறக்கப்படும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்ட’த்தின்கீழ் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்காக 2023 - 24 ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலாக, ‘நமஸ்தே’ என்ற திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தனியாக ஒதுக்கியது. நமஸ்தே திட்டம், துப்புரவு பணியை இயந்திரமயமாக்குவதாகும். இந்த திட்டத்தில் மேற்குறிப்பிட்ட மறுவாழ்வு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்பட்ட பின், 2023 - 24 மத்திய பட்ஜெட்டில் நமஸ்தே திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது.