இந்தியா

இந்தியாவில் எத்தனை புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது?-அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

இந்தியாவில் எத்தனை புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது?-அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

புலிகள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் புலிகளை பாதுகாக்க மத்திய அரசு ஏதேனும் திட்டங்களை முன்மொழிந்து உள்ளதா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, “வனவிலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் அதன் தோல் உள்ளிட்ட பாகங்களை கடத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது மாநில மற்றும் யூனியன் அரசுகளின் முதன்மையான கடமையாகும். மேலும் மத்திய வனத்துறை அமைச்சகத்தால் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; மிகமுக்கியமாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வன விலங்குகளை வேட்டையாடினால் கடுமையான தண்டனை உடனடியாக வழங்கவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் & வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யவும் சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்தியாவில் அழிந்து வரும் வன விலங்குகளான புலி, பனிச்சிறுத்தை, கிரேட் இந்தியன் பஸ்டர்ட், கங்கை டால்பின், டுகோங் ஆகியவற்றை பாதுகாக்க அதிக அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். அவற்றின் வாழ்விடங்களை மேம்படுத்த `வனவிலங்கு வாழ்விடம் மேம்பாட்டுத் திட்டம்’ எனும் திட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறோம்” என எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கணக்கின்படி இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளது. இவற்றில் 329 புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் (2019-2021) உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டு வரை நாட்டில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய வனத்துறை இணை அமைச்சர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.