இந்தியா

“ஜெய் ஸ்ரீராம்” பக்தர்களுக்கு ஆதரவு - பிரதமருக்கு கடிதம் எழுதிய 61 பிரபலங்கள்

“ஜெய் ஸ்ரீராம்” பக்தர்களுக்கு ஆதரவு - பிரதமருக்கு கடிதம் எழுதிய 61 பிரபலங்கள்

webteam

ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையென 61 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜெய் ஸ்ரீராம் என்பதை முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது என்றும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர் வலியுறுத்தியிருந்தனர். அந்தக் கடிதத்தில் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த கடிதம் போன்றே மற்றொரு கடிதமும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதம் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கமிடுபவர்கள் எல்லாம் தவறானவர்கள் அல்ல என்று வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரானவட், எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, பாரம்பரிய நடனக் கலைஞரும், எம்பி-யும் ஆன சோனால் மான்சிங் உள்ளிட்ட 61 பேர் இந்தக் கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளனர்.

அதில், ஜெய் ஸ்ரீராம் எனும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுபோன்ற மேலும் பல வன்முறைகளை ஜெய் ஸ்ரீராம் பக்தர்கள் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.