இந்தியா

‘நிபா’ வைரஸால் உயிரிழந்த செவிலியர் : உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்!

‘நிபா’ வைரஸால் உயிரிழந்த செவிலியர் : உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்!

webteam

கேரளாவில்‘நிபா’வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், சீல் செய்து தகனம் செய்தனர்.

கோழிக்கோடு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த கேரள மாநிலத்தை அச்சத்தில் உரைய வைத்துள்ள, உயிரைக்குடிக்கும் கொடூரன்தான் ‘நிபா’ வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை கேரளாவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறிப்பாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில்தான்‘நிபா’வைரஸின் பாதிப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பன்றிகள் மற்றும் பழந்தின்னி வெளவால்கள் மூலம் பரவுகிறது. இந்த விலங்குகள் மூலம் கால்நடைகளும் பரவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் பரவுவதற்குக் காரணம் பழந்தின்னி வெளவால்கள்தான். 

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா,‘கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சங்கராத் பகுதியில் வசிக்கும் குடும்பத்திற்கு‘நிபா’வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டின் அருகாமையில் இருந்த மரத்தில் உள்ள பழங்களை வெளவால் கடித்துள்ளது. ஆனால் அவர்கள் அனில் கடித்தது என நினைத்து பழங்களை உண்டுள்ளனர்.

இதனால் அந்தக் குடும்பத்தில், மூசா (62) என்பவரின் மகன்கள் முகமது சாதிக் (26), முகமது சலி (28) ஆகியோர் கடந்த 5ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி அன்று உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மூசாவின் சகோதரர் மனைவி மரியாம் (50) கடந்த 19ஆம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது மூசா, அவரது மகள் ஆதிபா (19) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல் சீல் செய்யப்பட்டு பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடலிலிருந்து வைரஸ் பாதிப்பு பரவுக்கூடும் என்பதால் அவ்வாறு தகனம் செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி இவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். செம்பாநோடா பகுதியை பூர்விகமாக கொண்டவர் செவிலியர் லினி. இவர் பெரம்ப்ரா தாலுகாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இவர் தான் மூசா குடும்பத்தினருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அவர்களிடம் இருந்து பரவிய ‘நிபா’வைரஸ் இவரது உயிரையும் பறித்துள்ளது. இரவு 2 மணியளவில் உயிரிழந்த லினியின் உடல், அதிகாலையில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாமல் அவசராமாக சீல் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது உடல், வைரஸ் பாதிப்பால் ஆபாத்தான நிலையில் இருந்ததால், உடனடியாக பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகளை கொண்டு தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புனேவில் உள்ள ஆராய்ச்சி கழத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றுள்ளனர்.

‘நிபா’வைரஸ் தாக்குதலை குணப்படுத்த இந்தியாவில் மருந்து இல்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.‘நிபா’வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, பின்னர் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் கோமா நிலையை அடைந்து உயிரிழக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தாலும், குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவே முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு கட்டுப்படுத்தினாலும், மூளை பாதிப்பு, உடலின் பாகங்கள் செயல்படாத நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது. வெளவால்கள் கடித்த பழங்கள் மட்டுமின்றி, மரங்களில் உற்பத்தி செய்யப்படும் கள் பானம் மூலமும் பரவுகின்றது.