இந்தியா

ஹிண்டன்பர்க்கின் ஒரே ஒரு அறிக்கைதான்! 10 நாட்களுக்குள் அதானி அடைந்த 6 வீழ்ச்சிகள்!

ஹிண்டன்பர்க்கின் ஒரே ஒரு அறிக்கைதான்! 10 நாட்களுக்குள் அதானி அடைந்த 6 வீழ்ச்சிகள்!

webteam

தொடர்ந்து ஏற்படும் பொருளாதாரச் சரிவுகளால், கெளதம் அதானி 6 முக்கியமான விஷயங்களில் வீழ்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஓர் அறிக்கையால், ஆசியாவின் மிகப் பிரபலமான அதானி குழுமம் சமீபகாலமாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. அதன்படி, கெளதம் அதானி தற்போது 6 முக்கிய விஷயங்களில் இருந்து வீழ்ச்சி அடைந்துள்ளார். அந்த 6 முக்கியமான விஷயங்கள் என்ன என இங்கு பார்ப்போம்.

  • கடந்த ஆண்டு இறுதியில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி, ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அவருடைய சொத்துக்கள் சரிவைச் சந்தித்தன. இதனால், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததுடன், உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி 15வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்தப் பட்டியலில் 9ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.
  • அதுபோல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வந்த கெளதம் அதானி தற்போது, அவருடைய பங்குகள் தொடர்ந்து சரிந்ததையடுத்து, அந்தப் பட்டத்தையும் இழந்துள்ளார். இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள், கிட்டத்தட்ட 30 சதவிகிதம் சரிந்து கடந்த வாரத்தைவிட 28 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளது.
    அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்துள்ளார்.
  • FPO விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தருவதாகத் தெரிவித்திருப்பதாலும் அவர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார்.
  • அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை அடமானமாக ஏற்றுக்கொள்ள முடியாது என சில வங்கிகள் அறிவித்துள்ளன. கடனுக்கு பிணையாக வழங்கப்பட்ட கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்ததால், முதலீட்டாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. கடன் பத்திரங்களுக்கு இணையாக வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்துமாறும், இனிமேல் அதானி குழும கடன் பத்திரங்களுக்கு கடன் கிடையாது என்றும் அறிவித்திருப்பதால் அதானி, மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளார்.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கை

முன்னதாக ஹிண்டன்பர்க், கடந்த 24ஆம் தேதி அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்தது.

அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதிலும், சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் - லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும் என்ன சம்பந்தம் என தாம் கேட்டதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்திருந்ததுடன், அதற்கு விளக்கம் அளித்திருந்ததுதான் அவர்கள் இடையே மீண்டும் புயலைக் கிளப்பியிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், ’ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது.

மேலும், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. அதில் `வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’ எனவும் `மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம்’ எனவும் அது தெரிவித்திருந்தது.